கூட்டுறவு வங்கிகளில் 99 சதவீத நகைக்கடன் தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகளில் 99 சதவீத நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
போடி:
போடி பழைய பஸ்நிலையம் அருகில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கியும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.
போடி நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் வரவேற்றார். தமிழக கூட்டுறவு துறை அமைச்சரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான இ.பெரியசாமி சிறப்புரையாற்றினார். அப்போது மழை பெய்ய தொடங்கியது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் குடைப்பிடித்தபடி அமைச்சர் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு வங்கிகளில் 99 சதவீதம் நகை கடனை தள்ளுபடி செய்து விட்டோம் . குறைந்த அளவில் உள்ள நகை கடனை ஓரிரு நாளில் விரைவில் தள்ளுபடி செய்து விடுவோம். போடி சட்டமன்ற தொகுதி நிரந்தரமாக இனி தி.மு.க. கோட்டையாக மாறும் என்றார்.
கூட்டத்தில் பெரியகுளம் சரவணகுமார் எம்.எல்.ஏ., போடி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன், போடி நகராட்சி முன்னாள் துணை தலைவர் சங்கர், முன்னாள் நகர தி.மு.க. செயலாளர்கள் ராஜா ரமேஷ், முகமதுபசீர், தி.மு.க. பிரமுகர் நம்பிக்கை நாகராஜன், நகராட்சி கவுன்சிலர்கள், நகர, ஒன்றியத்தை சேர்ந்த தி.மு.க. பிரமுகர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர் தி.மு.க. பிரமுகர் வி.என்.எஸ். அழகரசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story