கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம்

தேனி, போடியில் கொட்டித் தீர்த்த கோடை மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தேனி:
கோடை மழை
தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. போடியில் நேற்று பகல் 2 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 1 மணி நேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால், போடி நகரின் சாலைகள், தெருக்களில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
தேனி நகரில் நேற்று மாலை 3 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் இந்த கனமழை நீடித்தது. இதனால், தேனி நகரின் பிரதான சாலைகளான மதுரை சாலை, பெரியகுளம் சாலை, கம்பம் சாலை ஆகிய இடங்களில் மழைநீர் ஆறாக ஓடியது. குறிப்பாக இந்த 3 சாலைகளும் சந்திக்கும் நேரு சிலை சிக்னல் பகுதியில் முழங்கால் அளவுக்கு மழைநீர் வெள்ளமாக ஓடியது.
குளமான சாலை
நேரு சிலை சிக்னல் பகுதியில் உள்ள வாடகை கார் நிறுத்தம் மற்றும் கம்பம் சாலையில் தண்ணீர் வெளியேற முடியாமல் குளம்போல் தேங்கியது. இங்கிருந்து ராஜாவாய்க்காலுக்கு தண்ணீர் கடந்து செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் பழைய பஸ் நிலையத்துக்குள் மழைநீர் புகுந்தது. இதனால், பயணிகள் சிரமம் அடைந்தனர்.
அதுபோல், சாலையில் ஓடிய மழைநீரால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தபடி சென்றதால் பாதசாரிகள் மழையிலும், வாகனங்கள் பீய்ச்சி அடித்த தண்ணீரிலும் சேர்ந்தே நனையும் நிலைமை ஏற்பட்டது.
வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை மற்றும் சூறைக்காற்றுக்கு விவசாய பயிர்கள் நாசமாகியுள்ளன. குறிப்பாக ஆண்டிப்பட்டி, திம்மரசநாயக்கனூர் ஆகிய இடங்களில் ஏராளமான முருங்கை மரங்கள் முறிந்து விழுந்தன.
போடியில் நேற்று பெய்த பலத்த மழைக்கு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதில் திருவள்ளுவர் சிலை அருகே கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி நடைபெறுவதால், மழைநீர், கழிவுநீருடன் சேர்ந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பெரியகுளம் தென்கரை கச்சேரி ரோட்டில் நகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பழமை வாய்ந்த ஆலமர கிளை ஒன்று முறிந்து மின்வயர் மீது விழுந்தது. இதனால் அந்த பகுதியில் இருந்த 4 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன.
மயிலாடும்பாறை, தேனி வீரப்பஅய்யனார் கோவில் செல்லும் சாலை உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசமாகின. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர்சேத மதிப்பீடுகளை வருவாய்த்துறையினர் மற்றும் தோட்டக்கலை, வேளாண்மை துறையினர் சேகரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story