தினத்தந்தி புகார்பெட்டி


தினத்தந்தி புகார்பெட்டி
x
தினத்தந்தி 11 April 2022 11:31 PM IST (Updated: 11 April 2022 11:31 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார்பெட்டி பொதுமக்கள் குறைகள் பகுதி

நாய்கள் தொல்லை

வேலூர் நகரில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வதால் நடந்து செல்பவர்கள் அச்சம் அடைகின்றனர். இரவில் வாகனங்களில் செல்பவர்களை பின்தொடர்ந்து குரைக்கின்றன. எனவே, நாய்களை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

  -ரகுராமன், வேலூர்.

தடுப்பு அமைக்க வேண்டும்

  வேலூரை அடுத்த பொய்கை மாட்டுச் சந்தை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கழிவு நீர் செல்லும் கால்வாய் பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் மேற் பகுதியில் சாலையோரம் விபத்து ஏற்படாமல் இருக்க கான்கிரீட் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தத் தடுப்பின் ஒரு பகுதி உடைந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாலத்தின் ஓரம் தடுப்பு அமைக்க வேண்டும்.
  -சுந்தர், பொய்கை.

மழைக்காலம் போல் தேங்கி நிற்கும் தண்ணீர்

  வேலூர் சத்துவாச்சாரி மந்தை வெளியில் இருந்து பாலாற்றுக்குச் செல்லும் வழியில் குறிஞ்சி நகர் உள்ளது. இங்கு பல இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து தொடர்ச்சியாகத் தண்ணீர் வெளியேறி கொண்டே இருக்கிறது. இதனால் மழைக்காலங்களில் தெருக்களில் தண்ணீர் தேங்குவது போல எந்த நேரமும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குடிநீரை சேமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -ராஜேஷ்கண்ணன், வேலூர்.

 பல மாதங்களாக வீணாகும் குடிநீர்

  வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் அருகில் நேதாஜி நகர் உள்ளது. இங்கு அரசு நடுநிலைப்பள்ளி எதிரில் உள்ள மெயின் தெருவில் பல மாதங்களாகத் தொடர்ந்து குடிநீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -சக்கரவர்த்தி, வேலூர்.

சாலையில் விரைவாக தார் ஊற்ற வேண்டும்

  வேலூர் மாநகராட்சி மண்டலம்-3 42-வது வார்டான தொரப்பாடி எழில்நகர் பகுதியில் அனைத்துத் தெருக்களிலும் சாலை மோசமாக உள்ளது. அதில் நடந்து செல்லக்கூட முடியவில்லை சிரமமாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் விரைவாக தார் ஏற்றி சீரமைக்க வேண்டும்.
  -மதன் பிரகதீஸ்வரன், தொரப்பாடி.

 நச்சுப்புகையால் பாதிப்பு

  திருப்பத்தூர் தாலுகா பூங்குளம் கிராமத்தில் குப்பை கிடங்கு உள்ளது. அதை சரியாக பராமரிக்காமல் மக்கும் குப்பை, மக்கா குப்பையை சேர்த்து தீ வைத்து எரித்து விடுகின்றனர். இது, தினமும் இரவு, பகல் என எரிந்து கொண்டே உள்ளது. அதன் அருகில் ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, கோவில், குடியிருப்புகள் உள்ளதால் மக்களுக்கு நச்சுப்புைக பாதிப்பை ஏற்படுத்துகிறது. குப்பை கிடங்கை முறையாக பராமரிக்க வேண்டும்.
  -தமிழ்வாணன், பூங்குளம்.

பயணிகள் நிழற்குடை தேவை

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி-தேவிகாபுரம் சாலையில் புலவன்பாடி கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள வள்ளலார் மடம் பகுதியில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை கட்டித்தர ேவண்டும்.
  -மெய்கண்டன், புலவன்பாடி.

குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்

  குடியாத்தம் வ.உ.சி. தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலின் மேற்கு மாட வீதியில் குடிநீர் தொட்டி ஒன்று உள்ளது. அதன் அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் பல ஆண்டுகளாக கசிந்தபடியே உள்ளது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் பாசி படர்ந்து உள்ளது. உடனடியாக குடிநீர் வீணாவதைத் தடுத்து, உபரி நீர் வெளியேறி சாலையில் ஓடுவதைத் தடுத்து, அருகிலுள்ள கால்வாய்க்குத் திருப்ப வேண்டும்.
  -நவநீதகிருஷ்ணன், குடியாத்தம்.

மீண்டும் மீண்டும் குப்பைகள்

  வேலூர் சைதாபேட்டை பி.டி.சி. ரோட்டில் நல்லண்ணன் தெரு உள்ளது. இங்கு தெருவில் கொட்டப்படும் குப்பைகள் சிதறி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. குப்பைத் தொட்டி இல்லாத நிலையில் சிதறி கிடக்கும் குப்பைகளால் அந்தப் பகுதி அலங்கோலமாகக் காட்சி அளிக்கிறது. மீண்டும் மீண்டும் குப்பைக் கொட்டப்படுவதைத் தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
  -சிவக்குமார், வேலூர்.
  


Next Story