சுற்றுலா வேன் மோதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் சாவு

சின்னமனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதியதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலியாகினர்.
சின்னமனூர்:
சின்னமனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது சுற்றுலா வேன் மோதியதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலியாகினர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் குணசீலன் (வயது 61). இவர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது நண்பரின் மகன் அஜ்மீர் (42). ஆட்டோ டிரைவர்.
இவர்கள் 2 பேரும் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சின்னமனூருக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் மீண்டும் குச்சனூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அஜ்மீர் ஓட்டினார். குணசீலன் பின்னால் அமர்ந்து வந்தார். சின்னமனூர் மாணிக்கவாசகர் கோவில் அருகே உள்ள பைபாஸ் சாலையை அவர்கள் கடக்க முயன்றனர். அப்போது கேரள மாநிலம் தேக்கடியில் இருந்து தேனி நோக்கி வந்த சுற்றுலா வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
2 பேர் சாவு
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து குணசீலன், அஜ்மீர் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுற்றுலா வேன் டிரைவரான சென்னையை சேர்ந்த ராஜ்குமாரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story