தும்பு ஆலைகள் இன்று முதல் திறப்பு உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு

தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கீழ மணக்குடி பகுதியில் தும்பு ஆலைகளை இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க தும்பு ஆலை உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தென்தாமரைகுளம்,
தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கீழ மணக்குடி பகுதியில் தும்பு ஆலைகளை இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க தும்பு ஆலை உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
போராட்டம்
கீழமணக்குடி பகுதியில் தென்னை கதம்பையில் இருந்து தும்புகள் மற்றும் துகள்களை பிரித்தெடுக்கும் 15 தும்பு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் 1,500 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
மூலப்பொருளான கதம்பையின் விலை உயர்ந்ததாலும், மேலும் தும்பு ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்ததாலும் இதுதொடர்பாக அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தும்பு ஆலைகளை 15 நாட்கள் மூடி போராட்டம் நடத்த ஆலை உரிமையாளர்கள் முடிவெடுத்தனர். அதைத்தொடர்ந்து கடந்த 20-ந்தேதி முதல் தும்பு ஆலைகள் மூடப்பட்டன. இதனால் அங்கு வேலை செய்து வந்த 1,500 தொழிலாளர்கள் வேலையின்றி தவித்தனர்.
கூட்டம்
இந்த நிலையில் தும்பு ஆலைகளுக்கு கதம்பைகள் விற்பனை செய்யும் தென்தாமரைகுளம் தென்னை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம், முகிலன்குடியிருப்பு சமுதாய நலகூடத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் முத்துராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கசாமி, பொருளாளர் ஆறுமுக சிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் தும்பு ஆலை உரிமையாளர்கள் கதம்பை கொள்முதல் விலையை 30 காசு முதல் 50 காசுகளாக நிர்ணயம் செய்ததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தும்பு, கயிறு மற்றும் துகள்கள் விற்பனை விலை குறைவாக இருக்கும் இந்த காலகட்டத்தை கருத்தில் கொண்டு தற்போது ஒரு கதம்பைக்கு கொள்முதல் விலையாக ஒரு ரூபாய் 60 காசு வீதம் விலை நிர்ணயம் செய்து உரிமையாளர்கள் வழங்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும் இந்த கொள்முதல் விலைக்கு கீழாக எந்த விவசாயியும் தங்கள் கதம்பையை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் 80 தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தும்பு ஆலைகளை திறக்க முடிவு
இந்த நிலையில் தும்பு ஆலை உரிமையாளர்களின் கூட்டம் சித்தன் குடியிருப்பில் உள்ள ஒரு தும்புஆலையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தும்பு ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் சி.எல்.பாண்டியன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் மில்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 25-ந்தேதி (இன்று) முதல் ஆலைகளை இயக்க முடிவு செய்யப்பட்டது. கதம்பை விலை நிர்ணயம் குறித்து தென்னை விவசாயம் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேசி இரண்டுபேருக்கும் பாதிப்பு இல்லாத வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கதம்பைகள் பெறப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் 15 மில் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story