200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை


200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 25 April 2022 10:42 PM IST (Updated: 25 April 2022 10:42 PM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் 200 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பண்ருட்டி, 

பண்ருட்டி நகராட்சி 26-வது வார்டிற்குட்பட்ட களத்துமேட்டில் நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து 200 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். 40 ஆண்டுகளாக வசித்து வரும் அவர்களுக்கு நகாட்சி சார்பில் சாலை வசதி, மின்விளக்கு வசதி,  குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை செய்து கொடுத்துள்ளது. 
மேலும் இந்த பகுதியை சுற்றியுள்ள 13 ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்து பயிர் சாகுபடி செய்து வருகிறார்கள். 
இந்த நிலையில் தமிழகத்தில் நீர்ப்பிடிப்பு மற்றும் நீர்வழி புறம்போக்கு இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. 

வீடுகள் அகற்றம் 

அந்த வகையில் பண்ருட்டி களத்துமேடு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களை 15 நாட்களுக்குள் காலி செய்ய வலியுறுத்தி நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் காலி செய்யவில்லை. 
இதையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்காக பண்ருட்டி தாசில்தார் சிவகார்த்திகேயன், நகராட்சி அதிகாரி மகேஸ்வரி ஆகியோர் நேற்று காலை 8 மணிக்கு பொக்லைன் எந்திரங்களுடன் களத்துமேட்டிற்கு வந்தனர். அங்கு 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டன. 

பொதுமக்கள் போராட்டம் 

இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிகாரிகளையும் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை வீடுகளை காலி செய்யக் கூடாது, வீடுகளை காலி செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றனர். ஆனால் இதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவில்லை. 
அந்த சமயத்தில் பாதுகாப்புக்காக குறைந்த எண்ணிக்கையிலேயே போலீசார் வந்திருந்தனர். அவர்கள் பொதுமக்களை சமாளிக்க முடியாமல் திணறினர். இதையடுத்து தற்காலிகமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒத்திவைக்கப்பட்டது. 
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கப்படும் என்று நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
இதனிடையே இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் அப்பகுதி மக்கள் கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசிடம் மனு கொடுத்தனர். 

Next Story