வாலிபர்களை கத்தியால் குத்திய 2 பேர் கைது


வாலிபர்களை கத்தியால் குத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 April 2022 2:59 PM GMT (Updated: 28 April 2022 2:59 PM GMT)

மதுரையில் உரிமையாளருக்கு தெரியாமல் ஆட்டோவை எடுத்து சென்றதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர்களை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை, 
மதுரையில் உரிமையாளருக்கு தெரியாமல் ஆட்டோவை எடுத்து சென்றதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர்களை கத்தியால் குத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2 பேருக்கு கத்திக்குத்து
மதுரை தெப்பக்குளம் 16 கால் மண்டபம் பகுதியில் 2 வாலிபர்கள் கத்திக்குத்து காயங்களுடன் உயிருக்கு போராடுவதாக நேற்றுமுன்தினம் இரவு போலீசாருக்கு தகவல் வந்தது. தகவல் அறிந்து தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சின்ன கண்மாய் நேதாஜி தெருவைச் சேர்ந்த சதீஷ்ராஜா என்ற தக்காளி சதீஸ் (வயது 26), விரகனூர் ரிங்ரோடு சுரேஷ் மகன் புகழேந்திரன் (19) என்பது தெரியவந்தது.
உத்தரவு
மேலும் அவர்கள் 2 பேரையும் கத்தியால் குத்தியவர்களை உடனே பிடிக்க போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் துணை கமிஷனர் தங்கத்துரை மேற்பார்வையில் மீனாட்சி அம்மன் கோவில் உதவி போலீஸ் கமிஷனர் முத்துராஜ், தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன்  தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினார்கள்.
 தகராறு
அதில் தக்காளி சதீஷ் நேற்று முன்தினம் இரவு காமராஜர் சாலை தூமட்டி ரங்கசாமி ஐயர் சந்து பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (30) என்பவரின் ஆட்டோவை அவருக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக எடுத்துச்சென்றார். அதனைக் கேள்விப்பட்ட ராமகிருஷ்ணன் தனது கூட்டாளிகள் புகழேந்திரன் மற்றும் காமராஜர் சாலை தூமட்டி ரங்கசாமி சந்து தவசி மகன் பொன்ராஜ் (23) ஆகியோருடன் தனது ஆட்டோவை தேடிவந்தார்.
2 பேர் கைது
அப்போது தெப்பக்குளம் 16 கால் மண்டபம் பகுதியில் சதீஸ் ஆட்டோவுடன் நிற்பதை கண்டு பிடித்தனர். உடனே அங்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து சதீசை சரமாரியாக கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அவரும் பதிலுக்கு தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து புகழேந்திரனை சரமாரியாக குத்தியதாக தெரிய வருகிறது. இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். இதை கண்ட ராமகிருஷ்ணன், பொன்ராஜ் ஆகியோர் அங்கிருந்து தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் கத்திக்குத்தில் காயம் அடைந்த இருவரிடமும் புகார் வாங்கினார். 
பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பதுங்கி இருந்த ராமகிருஷ்ணன், பொன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.

Next Story