காதலிக்க மறுத்தததால் நிதி நிறுவன பெண் ஊழியர் மீது திராவகம் வீசிய வாலிபர்

பெங்களூருவில் காதலிக்க மறுத்ததால் தனியார் நிதி நிறுவன பெண் ஊழியர் மீது திராவகம் ஊற்றிய பயங்கரம் நடந்துள்ளது. தலைமறைவாகி விட்ட வாலிபரை போலீசார் தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:
நிதி நிறுவன பெண் ஊழியர்
பெங்களூரு ஹெக்கனஹள்ளி கிராஸ் பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 25 வயதில் மகள் உள்ளாள். இந்த இளம்பெண் எம்.காம் படித்துள்ளார். இவரது தந்தையை காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். காமாட்சி பாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சுங்கதகட்டேயில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக இளம்பெண் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று காலையில் வழக்கம் போல இளம்பெண் வேலைக்கு புறப்பட்டு சென்றார். கட்டிடத்தின் முதல் மாடியில் உள்ள நிதி நிறுவனத்திற்கு இளம்பெண் சென்று கொண்டு இருந்தார். அப்போது நிதி நிறுவனத்தின் முன்பாக, இளம்பெண்ணுக்கு தெரிந்த நபரான நாகேஷ் என்பவர் நின்று கொண்டு இருந்தார். நாகேசை பார்த்ததும் முதல் தளத்தில் இருந்து இளம்பெண் கீழே இறங்கி வந்துள்ளார்.
திராவகம் வீச்சு
அப்போது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த திராவகத்தை எடுத்து இளம்பெண்ணின் முகத்தில் ஊற்றினார். நாகேஷ் ஊற்றிய திராவகம், இளம்பெண்ணின் முகம், கழுத்து மற்றும் உடலில் பாகங்களில் பட்டதால், அவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்தனர். உடனே நாகேஷ் தப்பி ஓடிவிட்டார். பின்னர் இளம்பெண்ணை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மடிவாளா அருகே உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காதலிக்க மறுப்பு
இதற்கிடையில், சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் தனியார் நிதி நிறுவனத்திற்கு காமாட்சி பாளையா போலீசார் மற்றும் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சஞ்சீவ் எம்.பட்டீல் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று டாக்டர்கள் மற்றும் இளம்பெண்ணிடம் நடந்த சம்பவங்கள் குறித்து போலீசார் கேட்டு அறிந்து கொண்டனர். அப்போது கடந்த 7 ஆண்டுக்கு முன்பே இளம்பெண்ணுக்கும், நாகேசுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது இளம்பெண்ணை நாகேஷ் காதலிப்பதாக கூறி இருக்கிறார். ஆனால் நாகேசின் காதலை ஏற்க இளம்பெண் மறுத்து விட்டார். ஆனாலும் கடந்த 7 ஆண்டுகளாக தன்னை காதலிக்கும்படி இளம்பெண்ணை நாகேஷ் வற்புறுத்தி வந்திருக்கிறார். இதுகுறத்து நாகேசை இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் கண்டித்துள்ளனர்.
தனிப்படை அமைப்பு
ஆனாலும் இளம்பெண்ணின் பின்னால் சுற்றுவதை நிறுத்தாமல் நாகேஷ் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலையில் தனது தந்தையுடன் நிதி நிறுவனத்திற்கு இளம்பெண் வேலைக்கு வந்திருக்கிறார்.
ஆனால் இளம்பெண் வேலைக்கு வரும் நேரம் பற்றி ஏற்கனவே அறிந்திருநத நாகேஷ் காலை 8.40 மணியளவில் நிதி நிறுவனத்தின் நுழைவு வாயிலில் நின்று கொண்டிருந்துள்ளார். இளம்பெண் வந்ததும், அவர் மீது திராவகத்தை ஊற்றி விட்டு தப்பி ஓடியது தெரியவந்துள்ளது.
இளம்பெண் மீது திராவகம் வீசிய நாகேஷ் (வயது 27) ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருவது தெரியவந்துள்ளது. தற்போது அவர் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து காமாட்சி பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் தலைமறைவாகி விட்ட நாகேசை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார், அவரை கைது செய்ய தீவிரம் காட்டி உள்ளனர். காதலிக்க மறுத்த இளம்பெண் மீது திராவகம் வீசிய சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திட்டமிட்டு திராவகம் வீசிய நாகேஷ்
இளம்பெண் மீது திராவகம் வீசிய நாகேஷ், இந்த சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதாவது இளம்பெண் எப்போது நிறுவனத்திற்கு வேலைக்கு வருவார், அவர் மீது திராவகம் வீச வேண்டும், அப்போது தனக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே கையுறை உள்ளிட்டவற்றை நாகேஷ் அணிந்து வந்திருந்தது தெரியவந்துள்ளது. இதனை இளம்பெண்ணுடன் வேலைக்கு செய்யும் பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story