தேனியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்


தேனியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா  நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகிறார்
x
தினத்தந்தி 29 April 2022 3:36 PM GMT (Updated: 29 April 2022 3:36 PM GMT)

தேனியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பிரமாண்ட விழா இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

தேனி:

முதல்-அமைச்சர் வருகை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா தேனியில்  நாளை(சனிக்கிழமை) நடக்கிறது. தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக தேனிக்கு வந்து அரசு விழாவில் பங்கேற்கிறார். இதற்கான விழா தேனி அன்னஞ்சி விலக்கு அருகே புறவழிச்சாலையோரம் நடக்கிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடையுடன் கூடிய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேடை அருகில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. காய்கறிகளை கொண்டு அலங்கார நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 10 மணியளவில் விழா நடக்கிறது. இந்த விழாவில், தேனி மாவட்டத்தில் முடிவுற்ற அரசு திட்ட பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் அரசு துறைகளின் சார்பில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கி பேசுகிறார்.
இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொள்கின்றனர். விழாவுக்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த விழா பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக தேனி மாவட்ட போலீசார் மட்டுமின்றி விருதுநகர், மதுரை, சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து போலீசார் நேற்று முன்தினம் வரவழைக்கப்பட்டனர். சுமார் 2,500 போலீசார் பாதுகாப்பு பணிக்கு வந்த நிலையில், நேற்று மேலும் 400 போலீசார் பாதுகாப்பு பணிக்காக தேனி மாவட்டத்துக்கு வந்தனர்.
இதனால் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் ஏ.டி.ஜி.பி.க்கள் மயில்வாகனன், தாமரைக்கண்ணன், மதுரை ஐ.ஜி. அஷ்ரா கார்க், திண்டுக்கல் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா மற்றும் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே உள்பட 7 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், 11 மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 2,900 போலீசார் இந்த விழா பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தொண்டர்கள் உற்சாகம்
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு இன்றே
பணியிடம் ஒதுக்கப்பட்டது. அவர்கள் இன்று பகலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பணியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து விழா தொடர்பான பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. விழா மேடை மற்றும் விழா நடக்கும் இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். விழா நடக்கும் இடத்தில் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியே சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைவரும் அனுமதிக்கப்படுவார்கள்.
தி.மு.க. தலைவராக பலமுறை தேனி மாவட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக அவர் தேனிக்கு வருவதால் தேனி மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் 
தேனியில் விழாவை முடித்து விட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை 4 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வருகிறார். மாவட்டத்தில் நிறைவுபெற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, சில புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்குகிறார். இதற்கான விழா, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அந்த பகுதி விழாக்கோலம் பூண்டு உள்ளது. 
---------------
துளிகள்
---------------
காய்கறிகளால் அலங்கார வளைவு
தேனியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவுக்காக பிரமாண்ட மேடையுடன் கூடிய பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நுழைவு வாயிலில் தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறிகளை கொண்டு அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது. முருங்கைக்காய், சுரைக்காய், பூசணிக்காய், பப்பாளி, முள்ளங்கி, முட்டைக்கோஸ், பீட்ரூட், வெள்ளரிக்காய், பாகற்காய், வாழைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் இதில் இடம் பெற்றுள்ளன. இது கண்களை கவரும் வகையில் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.

டிஜிட்டல் திரைகள் அமைப்பு
விழா நிகழ்வுகளை பந்தலில் அமர்ந்துள்ள மக்கள் துல்லியமாக காணும் வகையில் 10-க்கும் மேற்பட்ட டிஜிட்டல் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. கடைசி வரிசையில் அமைந்துள்ள தொண்டர்களும் விழா நிகழ்வுகளை மேடைக்கு அருகில் அமர்ந்து பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்த இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கண்காணிப்பு கேமராக்கள்-கட்டுப்பாட்டு அறை
விழா மேடை, விழா பந்தல், நுழைவு வாயில், வாகன நிறுத்தம் உள்ளிட்ட இடங்கள் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. விழா பந்தல் அருகில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நவீன தொழில்நுட்ப சாதனங்கள் உதவியுடன் பணியாற்ற போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



Next Story