தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 29 April 2022 8:42 PM GMT (Updated: 29 April 2022 8:42 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

'தினத்தந்தி'க்கு பாராட்டு
சேலம் மாவட்டம் எம்.பெருமாபாளையம் கிராமத்தை அடுத்த மயானம் செல்லும் வழியில் புதுக்குட்டை ஏரி பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மின் கம்பிகள் தாழ்வாக தொங்கின. இதனால் மின்கம்பிகளை கம்பால் உயர்த்தி பிடித்தபிறகுதான் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியும். எனவே பொதுமக்கள் படும் சிரமங்கள் குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இதைதொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். புதிய மின்கம்பங்கள் அமைத்து தாழ்வாக தொங்கிய மின் கம்பிகளை உயர்த்தி கட்டினர். இதற்காக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-சி.செல்வம், மேட்டுப்பட்டி, சேலம்.
காலாவதியான பொருட்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கோட்டை வாசல் பகுதியில் உள்ள கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் ஆய்வு செய்து காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க வேண்டும்.
-சீனிவாசரெட்டி, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.
பொதுகழிப்பறை வசதி
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த மேல்பலாப்பட்டியில் பொதுசுகாதார கழிப்பறை இல்லை. இதனால் அந்த பகுதி மக்கள் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். பெண்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் பொது சுகாதார கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்..
-கிருஷ்ணா,, மேல்பாலப்பட்டி, நாமக்கல்.
சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடம்
ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு பகுதியில் ரேஷன் கடை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் ரேஷன் பொருட்களை அச்சத்துடனே வாங்கி செல்கின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து எந்த நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள ரேஷன் கடை கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
-கண்ணன்,, 20-வது வார்டு, ஆத்தூர்.
சுகாதாரம் இல்லாத இறைச்சிகள்
ஓமலூர் பகுதிகளில்  இறைச்சி கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளில் வெட்டப்படும் இறைச்சிகள் சுகாதார இன்றி காணப்படுகின்றன. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அதுபோல் சிக்கன் கடைகளில் கழிவுகள் அனைத்தும் ஆங்காங்கே கொட்டப்படுகிறது. எனவே மக்களுக்கு தரமான மற்றும் சுகாதாரமான வகையில் இறைச்சிகளை விற்பனை செய்ய சுகாதார ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
-ஆனந்த், ஓமலூர்.
குடிநீர் வழங்கப்படுமா?
சேலம் மாநகரில் குடிநீர் எத்தனை நாளைக்கு ஒரு முறைக்கு வரும், எவ்வளவு நேரம் வரும் என்பதை அறிவிக்க  வேண்டும். குடிநீர் விநியோகம் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு நேரங்களில் குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்க்கு உள்ளாகிறார்கள். எனவே அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் கிடைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜான், குப்தாநகர், சேலம்.

Next Story