செம்முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா


செம்முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா
x
தினத்தந்தி 30 April 2022 2:35 AM IST (Updated: 30 April 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

செம்முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா நடைபெற்றது.

அந்தியூரை அடுத்த பட்லூர் ஊராட்சி பூசாரியூரில் பிரசித்தி பெற்ற செம்முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். 
அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை தேர் திருவிழா கடந்த 15-ந் தேதி கோவிலில் கொடியேற்றும் மற்றும் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 25-ந் தேதி ஆயக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் சிங்கம்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் கோவிலை சென்றடைந்ததும் செம்முனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நேற்று பகல் 11 மணி அளவில் பூசாரியூர் மடப்பள்ளியில் இருந்து செம்முனீஸ்வரர், மன்னாத சாமி, பச்சியம்மன் ஆகிய தெய்வங்களின் உற்சவர் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்தபடி ஊர்வலமாக வனக்கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் அங்கு சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து வனக்கோவிலில்  அமைந்துள்ள செம்முனீஸ்வரர் உள்பட அனைத்து பரிவார சாமிகளுக்கும் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மீண்டும் சாமிக்கு பல்வேறு ஆராதனை பூஜைகள் செய்யப்பட்டன. 
இதைத்தொடர்ந்து பூசாரி மற்றும் பக்தர்கள் வாணவேடிக்கையுடன் குட்டிப்பாறை எனும் இடத்திற்கு சென்றனர். அங்கு ஆட்டுக்கிடாய் குட்டிக்கு பூஜை செய்து பூசாரி தீர்த்தம் தெளித்தார். அப்போது ஆட்டுக்கிடாய் துளுக்கிய பின் அதனை முறைதாரர்கள் சாமிக்கு பலி கொடுத்தனர். 
இதைத்தொடர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையாக நின்று தாங்கள் கொண்டுவந்த ஆட்டுக்கிடாய்களை செம்முனீஸ்வரருக்கு பலி கொடுத்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Next Story