வேலூரில் அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் பதிவானது


வேலூரில் அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் பதிவானது
x
தினத்தந்தி 30 April 2022 10:19 PM IST (Updated: 30 April 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் இந்த ஆண்டில் அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் பதிவானது. அனல் காற்றால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வேலூர்

வேலூரில் இந்த ஆண்டில் அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் பதிவானது. அனல் காற்றால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

வேலூரில் கோடை காலங்களான ஏப்ரல், மே மாதங்களில் வெயில் சுட்டெரிப்பது வழக்கம். பிற மாவட்டங்களை விட வேலூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். இந்தாண்டு மார்ச் மாத தொடக்கம் முதலே வெயில் கடுமையாக வாட்டி வதைக்க தொடங்கியது. நாளுக்கு நாள் அதிகரித்த வெப்பத்தின் அளவு கடந்த மாதம் 16-ந் தேதி இந்தாண்டில் முதன்முறையாக 100 டிகிரியாக பதிவானது.

அதைத்தொடர்ந்து தினமும் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த மாதம் 28-ந் தேதி 104.5 டிகிரியும், நேற்று 106.3 டிகிரியும் பதிவானது. இந்த நிலையில் இன்று காலை வழக்கத்தை விட வெயிலின் வெப்பம் அதிகமாக காணப்பட்டது.

 காலை 10 மணியளவிலேயே உச்சி வெயிலை போன்று சுட்டெரித்தது. மதியம் 12 மணியளவில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் கடுமையாக காணப்பட்டது.

108 டிகிரி பதிவானது

அதனால் இந்தாண்டு வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் பதிவானது. சுட்டெரித்த வெயிலால் வேலூர் மாநகரின் முக்கிய சாலைகளில் மதிய வேளையில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. 

இளநீர், கரும்புசாறு, குளிர்பானம், ஐஸ்கிரீம், ஜூஸ் கடைகளில் கூட்டம் அலைமோதியது. அவர்கள் தங்களுக்கு பிடித்தவற்றை வாங்கி குடித்து தாகம் தணித்து கொண்டனர். 

அதேபோன்று தள்ளுவண்டி கடைகளில் தர்பூசணி, வெள்ளரிபிஞ்சு, அன்னாசி பழங்களின் விற்பனையும் களைகட்டியது.

சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் குடைகளை பிடித்தபடி சென்றதை காணமுடிந்தது. கடும் வெயில் மற்றும் அனல் காற்றால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 

கோடை மழை பெய்து பூமியை குளிர செய்யாதா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Next Story