கருக்கலைப்பு செய்த பெண் சாவு

கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்தார்.
பெரம்பலூர்:
மருந்தகத்தில் மயங்கி கிடந்தார்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, லெப்பைக்குடிகாடு பேரூராட்சிக்கு உட்பட்ட சன்னாசியப்பா கோவில் தெருவை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது மனைவி வேளாங்கண்ணி (வயது 33). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வெற்றிவேல் கோவையில் தங்கியிருந்து அங்குள்ள காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
ெசவிலியரான வேளாங்கண்ணி சு.ஆடுதுறை கிராமத்தில் மருந்தகம் (மெடிக்கல்) வைத்து நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அத்தியூரில், கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுகா, சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (33) வைத்திருக்கும் மருந்தகத்தில் வேளாங்கண்ணி உடல்நிலை சரியில்லாமல் மயங்கி கிடப்பதாக, அவரின் மூத்த மகளுக்கும், தாய் தனலட்சுமி என்ற கேத்ரினுக்கும்(60) தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.
சாவு
அப்போது இளையராஜா அவர்களிடம், வேளாங்கண்ணி நெஞ்சுவலியால் மயங்கி விழுந்ததாகவும், அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தால் காப்பாற்றி விடலாம் என்றும் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து வேளாங்கண்ணியை ேகத்ரின் மீட்டு சிகிச்சைக்காக லெப்பைக்குடிகாட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து வேளாங்கண்ணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
கருக்கலைப்பு செய்ததால்...
இந்நிலையில் நேற்று வேளாங்கண்ணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கருக்கலைப்பு செய்ததில், உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் இறந்திருக்கலாம் என்று முதல் கட்ட அறிக்கையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வேளாங்கண்ணியின் தாய் கேத்ரின், தனது மகளின் சாவில் சந்கேதம் இருப்பதாக கூறி மங்களமேடு போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து வேளாங்கண்ணிக்கும், இளையராஜாவுக்கும் இடையே இருந்த பழக்கம் குறித்தும், வேளாங்கண்ணி கர்ப்பமாக இருந்தது குறித்தும், அவருக்கு கருக்கலைப்பு செய்தது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்போது தலைமறைவாக உள்ள இளையராஜாவை பிடித்து விசாரித்தால் உண்மை தெரியவரும் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கருக்கலைப்பு செய்ததால் பெண் இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story