மத்திய மந்திரி அமித்ஷா இன்று பெங்களூரு வருகை; மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பசவராஜ் பொம்மை ஆலோசனை


மத்திய மந்திரி அமித்ஷா இன்று பெங்களூரு வருகை; மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பசவராஜ் பொம்மை ஆலோசனை
x
தினத்தந்தி 2 May 2022 1:16 AM IST (Updated: 2 May 2022 1:16 AM IST)
t-max-icont-min-icon

கேலோ இந்தியா விளையாட்டி போட்டிகளின் நிறைவு விழாவில் பங்கேற்க இன்று (திங்கட்கிழமை) மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பெங்களூருவுக்கு வருகை தருகிறார். மந்திரிசபை விரிவாக்கம் குறித்து நாளை (செவ்வாய்க்கிழமை) அவருடன், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்த உள்ளார்.

பெங்களூரு:

அமித்ஷா பெங்களூரு வருகை

கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2023) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று சொந்த பலத்தில் ஆட்சி அமைக்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளது. இதற்காக இப்போதில் இருந்தே கர்நாடகத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் பா.ஜனதா மேலிடம் இறங்கி உள்ளது. இதையடுத்து, பா.ஜனதா மேலிட தலைவர்கள் கா்நாடகத்தில் முகாமிட்டு கட்சியை வளர்க்கவும், தேர்தல் வியூகங்களை வகுக்கும் வேலையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பா.ஜனதா மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா இன்று (திங்கட்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார். அதாவது டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு இன்று இரவு 11.20 மணியளவில் அமித்ஷா வர இருக்கிறார். நாளை (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் நடைபெறும் பல்வேறு நகிழச்சிகளில் அமித்ஷா கலந்து கொள்ள இருக்கிறார்.

நிறைவு விழாவில் பங்கேற்பு

குறிப்பாக பெங்களூருவில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளின் நிறைவு விழா நாளை மாலை 5.30 மணியளவில் நடைபெற இருக்கிறது. இந்த நிறைவு விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்கி போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளார். நாளை காலை 9.55 மணியளவில் பெங்களூருவில் உள்ள பசவேசுவரா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளாா்.

மதியம் 12 மணியளவில் சாத்தனூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்க உள்ளார். அதன்பிறகு, மதியம் 1.30 மணியளவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீட்டில் நடைபெறும் விருந்தில் கலந்து கொண்டு மதிய உணவு சாப்பிட உள்ளார். அதைத்தொடர்ந்து, மதியம் 2.30 மணியளவில் மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும்பல்வேறு கூட்டங்களில் அமித்ஷா கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்,

பசவராஜ் பொம்மையுடன் ஆலோசனை

அமித்ஷா பெங்களூருவுக்கு வரும் போது மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசிக்கப்படும் என்று ஏற்கனவே முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை என்று தெரிவித்திருந்தாா். அதன்படி, மதியம் 1.30 மணியளவில் பசவராஜ் பொம்மை வீட்டுக்கு செல்லும் அமித்ஷா, அங்கு கர்நாடக அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளது தெரியவந்துள்ளது. கர்நாடக சட்டசபை தோ்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் மட்டுமே இருப்பதால், மந்திரிசபை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகிறாா்கள்.

இதனால் தனது வீட்டுக்கு வரும் அமித்ஷாவுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மந்திரிசபை விரிவாக்கம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார். குறிப்பாக மந்திரிசபை விரிவாக்கம் செய்வதா? அல்லது மாற்றியமைப்பதா? என்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. மந்திரிசபையில் இருப்பவர்களை கூண்டோடு நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுத்ததால் சர்ச்சையும், கட்சிக்கு நெருக்கடியும் ஏற்படலாம் என்று பா.ஜனதா மேலிடம் கருதுவதாக சொல்லப்படுகிறது.

மந்திரிசபை மாற்றியமைப்பு?

இதன் காரணமாக மந்திரிசபையில் இடம் பெற்றுள்ள மூத்த மந்திரிகள் 5 பேரை மட்டும் நீக்கிவிட்டு, அவர்களை கட்சி பணியில் ஈடுபடுத்த மேலிடம் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே 5 மந்திரி பதவிகள் காலியாக உள்ளது. மூத்த மந்திரிகள் 5 பேரை நீக்கினால், 10 இடங்கள் காலியாகும். அந்த 10 இடங்களுக்கும் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுபற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தி விட்டு, இந்த வார இறுதிக்குள் மந்திரிசபை மாற்றியமைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் அமித்ஷாவின் வருகையை எதிர்பார்த்து மந்திரி பதவிக்காக காத்திருக்கும் எம்.எல்.ஏ.க்கள் ஆவலோடு உள்ளனர்.

சட்டசபை தேர்தல் குறித்து...

அதே நேரத்தில் நாளை மதியம் 2.30 மணியில் இருந்து 5 மணி வரை சட்டசபை தோ்தல், கர்நாடகத்தில் பா.ஜனதாவை பலப்படுத்துவது குறித்து மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் மற்றும் நிர்வாகிகளுடன் அமித்ஷா தொடர் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது பா.ஜனதா எந்த பகுதியில் எல்லாம் செல்வாக்குடன் உள்ளது, எந்த மாவட்டங்களில் செல்வாக்கு இல்லாமல் இருக்கிறது என்பதை கேட்டறிந்து, செல்வாக்கு இல்லாத பகுதிகளில் கட்சியை வளர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளுக்கு அமித்ஷா ஆலோசனை வழங்க இருக்கிறார்.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற என்ன மாற்றங்களை கட்சியிலும், ஆட்சி நிர்வாகத்திலும் செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளையும் அமித்ஷா வழங்க இருப்பதாக தெரிகிறது. அத்துடன் கட்சியை வளர்க்க சாதாரண தொண்டர் முதல் பிற நிர்வாகிகள் வரை 25 பேரிடம் கட்சி அலுவலகத்தில் வைத்து அமித்ஷா பேச இருக்கிறாா். அமித்ஷாவின் வருகையால் பா.ஜனதாவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Next Story