இந்திய எல்லைக்குள் நுழைந்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்- மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா

பயங்கரவாத செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்திய எல்லைக்குள் நுழைந்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆவேசமாக பேசினார்
பெங்களூரு: பயங்கரவாத செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்திய எல்லைக்குள் நுழைந்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆவேசமாக பேசினார்.
புரட்சிகரமான மாற்றம்
கர்நாடக அரசின் உயர்கல்வித்துறை சார்பில் நிருபதுங்கா பல்கலைக்கழக தொடக்க விழா பெங்களூரு நிருபதுங்கா ரோட்டில் உள்ள அந்த பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு அந்த பல்கலைக்கழகத்தை தொடங்கி வைத்தார். மேலும் அவற்றின் கட்டிட கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன் பல்லாரியில் போலீஸ் துறையில் அமைக்கப்பட்டுள்ள தடய அறிவியல் ஆய்வு கூடம், மின்னணு ரோந்து திட்டத்தையும் தொடங்கி வைத்தார். பின்னர் அமித்ஷா பேசியதாவது:-
இந்தியாவை முன்னேற்றி உலக அளவில் உன்னத இடத்தில் நிறுத்துவது மற்றும் இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பது தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சபதம் ஆகும். இந்த புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவை அறிவுசார் அடிப்படையில் ‘சூப்பர் பவர்’ இந்தியாவாக உருவாக்கப்படும். நாட்டிலேயே முதல் முறையாக தேசிய கல்வி கொள்கையை கர்நாடகம் செயல்படுத்த தொடங்கியுள்ளது பாராட்டுக்குரியது.
உலகிற்கே குரு
மாணவர்கள் தான் நாட்டின் எதிர்காலம். அவர்களிடம் தேசபக்தி கலாசாரத்தை வளர்க்க வேண்டியது அவசியம். நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா உலகு குரு என்ற நிலையை அடைவதை இளைஞர்கள் உறுதி செய்ய வேண்டும். அதாவது 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகிற்கே குருவாக மாற்ற நாம் சபதம் ஏற்க வேண்டும்.
நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் 6 மத்திய பல்கலைக்கழகங்கள், 7 இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள், 7 இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், 209 மருத்துவ கல்லூரிகள், 320 பல்கலைக்கழகங்கள், 5,709 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அத்துடன் 410 கிராமிய பல்கலைக்கழகங்களும் தொடங்கப்பட்டுள்ளன. தடய அறிவியல் உள்பட பல்வேறு தொழில்நுட்ப கல்லூரிகளும் தொடங்கப்பட்டு இருக்கின்றன.
பயங்கரவாத செயல்கள்
பயங்கரவாத செயல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மோடி பிரதமரான பிறகு நாட்டின் எல்லைக்குள் நுழைபவர்களுக்கு பதிலடி கொடுத்து கொடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு உரியிலும், 2019-ம் ஆண்டு புல்வாமாவிலும் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. அடுத்த 10 நாட்களில் பாகிஸ்தானில் துல்லிய தாக்குதலை நடத்தி பதிலடி கொடுத்தோம். இந்திய எல்லைக்குள் யாரும் நுழைய முடியாது என்பதை ஒட்டுமொத்த உலகமும் அறிந்து கொண்டது. ஒருவேளை நமது எல்லைக்குள் யாராவது நுழைந்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசியல் சாசனத்தில் 370-வது பிரிவை நீக்கி காஷ்மீரை இந்தியாவுடன் மோடி இணைத்தார்.
வாய்ப்பு கிடைக்கவில்லை
நாட்டின் சுதந்திரத்திற்காக நமது தலைவர்கள் பலர் உயிர்த்தியாகம் செய்தனர். நாட்டிற்காக தியாகம் செய்ய நமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நாட்டிற்காக வாழ நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வரி ஏய்ப்பு செய்ய மாட்டோம், போக்குவரத்து விதிகளை மீற மாட்டோம் போன்ற சிறிய விஷயங்களுக்காக அனைவரும் உறுதி எடுத்து கொள்ளுங்கள். அனைவருக்கும் அட்சய திருதியை மற்றும் பசவ ஜெயந்தி வாழ்த்துக்கள்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். அமித்ஷா வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
Related Tags :
Next Story