பிளஸ்-2 தேர்வு நடக்கும் அறை கண்காணிப்பாளர்களாக 1,500 ஆசிரியர்கள் நியமனம்


பிளஸ்-2 தேர்வு நடக்கும் அறை கண்காணிப்பாளர்களாக 1,500 ஆசிரியர்கள் நியமனம்
x
தினத்தந்தி 5 May 2022 2:11 AM IST (Updated: 5 May 2022 2:11 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் இன்று தொடங்கும் பிளஸ்-2 தேர்வு நடக்கும் அறை கண்காணிப்பாளர்களாக 1,500 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இன்று தொடங்கும் பிளஸ்-2 தேர்வு நடக்கும் அறை கண்காணிப்பாளர்களாக 1,500 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ-மாணவிகள் எழுத இருக்கின்றனர்.
இதில் தமிழ்நாட்டில் மட்டும் 3 ஆயிரத்து 81 தேர்வு மையங்களில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 343 மாணவர்கள், 4 லட்சத்து 31 ஆயிரத்து 341 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 22 ஆயிரத்து 684 பேர் எழுதுகின்றனர். குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் ஆகிய 4 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 11,216 மாணவர்களும், 12,056 மாணவிகளும் ஆக மொத்தம் 23,272 பேர் தேர்வு எழுதுகிறார்கள்.
இதற்காக 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 81 மையங்கள் பள்ளி மாணவர்களுக்கும், 4 மையங்கள் தனித் தேர்வர்களுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வில் மாற்றுதிறனாளி சலுகை கோரி 106 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். 73 மாணவ, மாணவிகளுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வெழுத கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 110 மாணவ, மாணவிகளுக்கு மொழிப்பாடம் விலக்களித்தும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னேற்பாடு
தேர்வு மையங்களில் முன்னேற்பாடுகள் நேற்று நடந்தது. இந்த தேர்வு மையங்களில் உள்ள மேஜைகளில் தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளின் தேர்வு எண்களை ஆசிரிய- ஆசிரியைகள் எழுதினர். நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, கோட்டார் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் எழுதப்பட்டது.
பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கான பொதுத்தேர்வு வினாத்தாள்கள் அந்தந்த கல்வி மாவட்டங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு தேர்வு மையங்களில் ஒப்படைக்கப்பட உள்ளது. தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க 120 நிரந்தர மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
1500 ஆசிரியர்கள்
குமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர் அனிதா தலைமையிலும், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி புகழேந்தி தலைமையிலும் தனி பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதன்மைக் கண்காணிப்பாளர்களாக மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் 90 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். துறை அலுவலர்களாக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் மூத்த முதுகலை ஆசிரியர்கள் 90 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 1500 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணி வரை நடக்கிறது. தேர்வு எழுதும் மாணவ- மாணவிகள் 9.15 மணிக்கு முன்னதாக வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தேர்வு எழுதுபவர்களைத் தவிர மற்றவர்கள் யாருக்கும் உள்ளே அனுமதி கிடையாது. தேர்வு மையத்துக்குள் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு மையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Next Story