தஞ்சையில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது


தஞ்சையில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது
x
தினத்தந்தி 5 May 2022 2:15 AM IST (Updated: 5 May 2022 2:15 AM IST)
t-max-icont-min-icon

அக்னி நட்சத்திரம் தொடக்க நாளான நேற்று தஞ்சையில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது. இதன் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்தது.

தஞ்சாவூர்
கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயில் வாட்டி வதைக்கும். ஆனால் தற்போது பருவ நிலை மாற்றம் காரணமாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த மார்ச் மாதம் முதல் கொளுத்தி வருகிறது.
இடையில் அவ்வப்போது லேசான மழையும் பெய்தது. இருப்பினும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தநிலையில் கோடை வெயிலின் உச்சகட்டமான கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது.
25 நாட்கள் நீடிக்கும்
இந்த அக்னி நட்சத்திரம் 25 நாட்கள் அதாவது வருகிற 28-ந்தேதி வரை நீடிக்கும். இந்த நாட்களில் வழக்கமான நாட்களில் பதிவாகும் வெப்பத்தை விட அதிக அளவில் காணப்படும். இந்தநிலையில் தஞ்சை மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் தொடக்க நாளான நேற்று 105 டிகிரி வெயில் கொளுத்தியது. கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்திய நிலையில் நேற்று இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 105 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. பழக்கடைகள், குளிர்பானக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடக்க நாளில் மழை காணப்பட்டால் வெயிலின் தாக்கம் சற்று குறையும். வெயில் அதிகமாக காணப்பட்டால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Next Story