‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேறும் சகதியுமான ரோடு
கோபி திருமலை நகர் 2-வது வீதியில் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது மழை பெய்ததால் குழிகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. அந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த ரோட்டில் இருசக்கர வாகனங்களும், 4 சக்கர வாகனங்களும் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றன. விபத்து ஏதும் நடப்பதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டை சீரமைக்கவேண்டும்.
விஸ்வம், கோபி.
ரோட்டோரம் குப்பை
கோபியில் இருந்து நஞ்சகவுண்டம்பாளையம் வழியாக புதுக்காடு, கள்ளிப்பட்டி செல்லும் ரோட்டோரம் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. மேலும் இந்த குப்பைக்கு அடிக்கடி யாரோ தீ வைத்து விடுகிறார்கள். இதனால் புகைமூட்டம் ஏற்பட்டு அப்பகுதி மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கள்ளிப்பட்டி செல்லும் ரோட்டோரம் குப்பைகள் கொட்டப்படுவதையும், அதற்கு தீ வைக்கப்படுவதையும் தடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நஞ்சகவுண்டன்பாளையம்.
வீதியில் கழிவுநீர்
பவானி அருகே உள்ள எலவமலை ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் மணல் ஆபீஸ் வீதியில் சாக்கடை கழிவுநீர் தெருவில் ஓடிக்கொண்டிருக்கிறது. முறையாக சாக்கடை வசதி இல்லாத காரணத்தால் கழிவுநீர் பாதையில் செல்கிறது. எனவே சுற்றுப்புற சுகாதாரத்தை காக்க உடனே சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் பெரியார் நகரில் சாக்கடை வசதி அமைத்துக்கொடுக்க வேண்டும்.
பொதுமக்கள், எலவமலை
வீணாகும் மரக்கன்றுகள்
நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டுள்ளன. சாலைகளில் மரக்கன்றுகள் நடுவதற்காக இந்த மரக்கன்றுகள் கொள்முதல் செய்யப்பட்டு அங்கே வைக்கப்பட்டுள்ளன. ஆனால் முறையாக பராமரிக்கப்படாததால் மரக்கன்றுகள் காய்ந்து வீணாகும் நிலையில் உள்ளன. எனவே அந்த மரக்கன்றுகளை தன்னார்வலர்களிடமாவது வழங்கி சாலையோரம் நடுவதற்கு அதிகாரிகள் விரைவில் முடிவெடுப்பார்களா?
குமார், நம்பியூர்
திறந்து கிடக்கும் தொட்டி
கோபி கோடீஸ்வரர் நகரில் ஒரு வீதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடிநீர்குழாய் போடுவதற்காக குழி தோண்டினார்கள். அதில் சிமெண்டு கலவை பூசி தொட்டி அமைத்துள்ளார்கள். ஆனால் தொட்டி மூடப்படாமல் உள்ளது. யாராவது அந்த தொட்டி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தால் தடுமாறி விழுந்துவிடும் நிலை உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் திறந்து கிடக்கும் தொட்டியை உடனே சிலாப்புகள் கொண்டு மூட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நாதன், கோபி.
பாராட்டு
மொடக்குறிச்சி அருகே உள்ள 46 புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய செட்டிபாளையம் கிராமத்தில் முனியப்பன் கோவில் செல்லும் வீதியிலும், நல்லம்மாள் நகர் செல்லும் வீதியிலும் மின்விளக்குகள் ஒளிரவில்லை. இதனால் பெண்கள், முதியவர்கள் இரவில் நடமாட அச்சப்பட்டார்கள். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து மின்வாரிய பணியாளர்கள் வந்து ஔிராத மின்விளக்குகளை ஒளிர வைத்துள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் எங்கள் பகுதி பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரியசெட்டிபாளையம்.
Related Tags :
Next Story