சுவஸ்திக் கார்னர் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறியது


சுவஸ்திக் கார்னர் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறியது
x
தினத்தந்தி 6 May 2022 3:07 AM IST (Updated: 6 May 2022 3:07 AM IST)
t-max-icont-min-icon

சுவஸ்திக் கார்னர் அருகே குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.

ஈரோடு
சுவஸ்திக் கார்னர் அருகே குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது.
சாலை விரிவாக்க பணி
ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் வரையான சத்தி ரோடு விரிவாக்க பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு சுவஸ்திக் கார்னரில் இருந்து தொடங்கி நடந்து வரும் இந்த பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. சாலையின் 2 பக்கங்களும் மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருவதால், சாலையோரங்களில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. இவ்வாறு சுவஸ்திக் கார்னர் பகுதியில் கடந்த சில நாட்களாக பள்ளம் தோண்டும் பணி நடக்கிறது.
இதனால் அங்கு போடப்பட்டு உள்ள பல்வேறு குழாய்களும் துண்டிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக குடிநீர் இணைப்பு குழாய்கள் துண்டிக்கப்பட்டு, குடிநீர் வீணாக செல்கிறது. வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குழாய்களும் உடைந்து பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் குட்டைபோல தேங்கி உள்ளது.
சரி செய்ய வேண்டும்
அதில் குடிநீர் கலந்து வருகிறது. சுமார் 10 நாட்களாக குடிநீர் வீணாக சென்றபோதும் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக அந்த பகுதியினர் புகார் தெரிவித்து உள்ளனர். குடிநீர் இங்கு வீணாக செல்வதால், வீடுகளுக்கு தேவையான தண்ணீர் வினியோகம் செய்யப்படாமல், அந்த பகுதி மக்கள் குடிநீர் விலைக்கு வாங்கும் நிலையும் ஏற்பட்டு உள்ளது. எனவே குடிநீர் குழாய் உடைப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். மேலும், இந்த பகுதி மிகுந்த போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாகும்.
சந்தைக்கு செல்லும் மக்கள், நடைபயிற்சிக்கு செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள், பள்ளிக்கூடம், கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வெளியூர் மக்கள் என்று பலரும் நடந்து செல்லும் சாலையாகும். அருகே போக்குவரத்து சிக்னலும் உள்ளது. இங்கு தொடர்ந்து பல நாட்கள் பணி நடந்து வருவதாலும், பணிக்கு வசதியாக, பள்ளத்தில் இருந்து சாக்கடை தண்ணீரை இறைத்து சாலையில் விடுவதாலும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே இங்கு கூடுதல் ஆட்கள் மற்றும் எந்திரங்கள் மூலம் விரைவில் பணியை முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் வைத்து உள்ளனர்.

Next Story