ஈரோடு சோலாரில் ரூ.63½ கோடி மதிப்பில் 63 ரேக்குகளுடன் புதிய பஸ் நிலையம்


ஈரோடு சோலாரில் ரூ.63½ கோடி மதிப்பில் 63 ரேக்குகளுடன் புதிய பஸ் நிலையம்
x
தினத்தந்தி 6 May 2022 3:08 AM IST (Updated: 6 May 2022 3:08 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு சோலாரில் ரூ.63½ கோடி மதிப்பில் 63 ரேக்குகளுடன் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

ஈரோடு
ஈரோடு சோலாரில் ரூ.63½ கோடி மதிப்பில் 63 ரேக்குகளுடன் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
புதிய பஸ் நிலையம்
ஈரோடு பஸ் நிலையத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் அமைந்துள்ளதால் பஸ்கள் வந்து செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதலாக 2 இடங்களில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கரூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்பட தென் மாவட்டங்கங்களில் இருந்து ஈரோட்டிற்கு வந்து செல்லும் பஸ்களுக்காக கரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள சோலாரில் நவீன பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி புதிய பஸ் நிலையம் அமையும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
63 ரேக்குகள்
சோலாரில் மாநகராட்சிக்கு சொந்தமாக 52 ஏக்கர் இடம் உள்ளது. இதில் 24 ஏக்கர் பரப்பளவில் புதிய நவீன பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.63 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை சமப்படுத்தும் பணி தொடங்கி முடிந்துள்ளது.
இந்த புதிய பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 63 பஸ்கள் நிற்கும் வகையில் 63 ரேக்குகள் அமைக்கப்பட உள்ளன. மேலும் பஸ் நிலையம் அருகே டவுன் பஸ் வந்து செல்லும் வகையில் புதிய ரேக்குகள் அமைக்கப்படுகிறது. பஸ் நிலையத்தை சுற்றி 163 கடைகள் அமைய உள்ளது.
போக்குவரத்து நெரிசல்
பயணிகள் ஓய்வு அறைகள், கழிப்பிட வசதிகள், முன்பதிவு கவுன்ட்டர் போன்ற வசதிகளும் செய்யப்பட உள்ளது. மேலும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்க தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. பஸ் நிலையம் அமைப்பதற்கான டெண்டர் இன்னும் 3 வாரத்தில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெண்டர் முடிந்ததும் பணிகள் தொடங்கிய நாளில் இருந்து 2 ஆண்டுக்குள் புதிய பஸ்நிலையம் கட்டி முடிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய பஸ் நிலையம் அமைந்தால் மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது.

Next Story