‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 6 May 2022 8:37 PM IST (Updated: 6 May 2022 8:37 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விழுந்த பெயர் பலகை நிமிர்ந்தது

சென்னை வில்லிவாக்கம் தாதங்குப்பம் காமராஜர் தெருவில் 3 மாதகாலமாக தெரு பெயர் பலகை கீழே விழுந்து கிடப்பது தொடர்பாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கையால் தெரு பெயர்பலகை சரி செய்யப்பட்டுள்ளது. விரைந்து செயல்பட்ட மாநகராட்சிக்கும் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும் அப்பகுதி மக்கள் தங்களது நன்றியை தெரிவித்து உள்ளனர்.

சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் சாலை

சென்னை நெற்குன்றம் செல்லியம்மன் நகர், ஐப்பசி தெருவில் பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையின் மேடு பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி, வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பெரும் இடையூறாக அமைகின்றது. எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இப்பகுதியில் சாலையை சீரமைத்தும், கழிவுநீர் தேங்காத வகையிலும் சரிபடுத்தி தர வேண்டுகிறோம்.

- சீனு, செல்லியம்மன் நகர்.



மூடி சரி செய்யப்படுமா?

சென்னை பெரம்பூர் தனம்மாள் தெருவில் அமைந்துள்ள மழை நீர் சேகரிப்பு தொட்டி சேதம் அடைந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அதன் மூடி உடைந்து போன நிலையில் இருக்கின்றது. தற்போதைக்கு கல்லை வைத்து மூடி வைத்துள்ளனர். மூடியை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

- செந்தில்குமார், பெரம்பூர்.

அபாயகரமான பள்ளம்

காஞ்சீபுரம் மாவட்டம் சர்வ தீர்த்தம்-முசரவாக்கம் பகுதியில் உள்ள அரிசி ஆலை அருகே இருக்கும் சாலையின் ஓரத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளம் விழுந்து காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு பள்ளமானது ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருக்கின்றது. விபரீதம் எதுவும் ஏற்படாமல் இருக்க விரைந்து பள்ளத்தை சரி செய்ய வேண்டும். சமபந்தப்பட்டதுறை நடவடிக்கை எடுப்பார்களா?

- வளவன், வாகனஓட்டி.



சேதமடைந்த மின்கம்பம்; ஆபத்து அதிகம்

சென்னை வில்லிவாக்கம் கிழக்கு மாட தெருவில் மின்கம்பம் ஒன்று பாதி அரிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இதன் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து எப்போது வேண்டுமென்றாலும் உடைந்து கீழே விழுந்துவிடக்கூடிய வகையில் இருக்கின்றது. மின்வாரியம் கவனித்து ஆபத்து எதுவும் ஏற்படும் முன்பு மின்கம்பத்தை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- அருண், வில்லிவாக்கம்.


குவியும் குப்பைகளால் அலங்கோலம்

சென்னை சேப்பாக்கம் வெங்கடேச கிராமணி தெருவில் மூடப்பட்ட மதுபான கடை எதிரில் நீண்ட நாட்களாக குப்பைகள் கொட்டப்படுவது தொடர்ந்து வருகின்றது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் அலங்கோலமாகவும் காட்சியளிக்கிறது. மேலும் சமூகவிரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் மாறி வருகின்றது. இதன் அருகே மகளிர் பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளதால் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பில்லாத இடமாக இருக்கின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தை சுத்தம் செய்து, இதுபோன்ற சமூக சீர்கேடுகள் நடைபெறாதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுகிறோம்.

- சார்லஸ். சிந்தாதிரிப்பேட்டை.



நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேற்கு தாம்பரம் சிவ சண்முகம் தெரு, குடிநீர் தொட்டி எதிரே இருக்கும் கழிவுநீர் வடிகால்வாய்களில் மூடிகள் உடைந்து ஆபத்தான நிலையில் இருக்கின்றது. ஒன்றுக்கும் மேற்பட்ட வடிகால்வாயில் இது போன்ற நிலை தொடர்கின்றது. இரவு நேரங்களில் பொதுமக்களுக்கு அபாயம் விளைவிக்கும் நிலையில் இருக்கும் இது போன்ற கழிவுநீர் வடிகால்வாய்களின் மூடிகளை, முன்எச்சரிகையாக சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும்.

- தினேஷ், தாம்பரம்.

ஆபத்தான கால்வாய்

சென்னை வியாசர்பாடி மார்கெட் செல்லும் இ.எச்.சாலையில் இருக்கும் மழைநீர் வடிகால்வாயானது திறந்த நிலையில் இருக்கின்றது. மேலும் கம்பிகள் அங்குமிங்குமாக நீட்டிக் கொண்டும் விபரீதமாக உள்ளது. சாலையோரத்தில் இருப்பதால் வாகனஓட்டிகள் தவறி விழுந்துவிட வாய்ப்புகள் அதிகம். உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையில் இருக்கும் மழைநீர் வடிகால்வாயை மூடி, ஆபத்து நேராமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.

- முத்து, வியாசர்பாடி.

கழிவுநீர் வெளியேற்றம், துர்நாற்றம்

சென்னை பாரிமுனை லிங்கி செட்டி தெருவில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வருகின்றது. இந்தநிலை கடந்த ஒரு வாரமாக தொடருகின்றது. கழிவுநீர் வெளியாகி துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் நிலையுள்ளது. குடிநீர்-கழிவுநீர் அகற்றும் வாரியம் கவனித்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க வேண்டும்.

- அர்ஜுன், பாரிமுனை.

பெயர்பலகை எங்கே?

சென்னை நீலாங்கரை கசுரா தோட்டம் 3-வது குறுக்குத் தெருவில் இருக்கும் பெயர் பலகையில் வெறும் சட்டங்கள் மட்டுமே உள்ளது. இதனால் யாருக்கு என்ன பயன்? கூரியர், கேஸ் போன்றவைகளை வினியோகம் செய்ய வரும் நபர்கள், முகவரி தெரியாமல் அங்குமிங்குமாக அலைய வேண்டியுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி தெருவில் பெயர்பலகையை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

- கார்த்திக், நீலாங்கரை.




Next Story