சீர்காழியில் பலத்த காற்றுடன் மழை மரங்கள் வேரோடு சாய்ந்தன; மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின் தடை


சீர்காழியில் பலத்த காற்றுடன் மழை மரங்கள் வேரோடு சாய்ந்தன; மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின் தடை
x
தினத்தந்தி 8 May 2022 12:30 AM IST (Updated: 7 May 2022 5:47 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பி அறுந்து விழுந்து, மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

சீர்காழி:-

சீர்காழியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பி அறுந்து விழுந்து, மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். 

பலத்த மழை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் சீர்காழி பனங்காட்டு தெருவில் உள்ள வேப்ப மரங்கள் வேரோடு சாய்ந்து அருகில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் குடியிருப்புகளில் சாய்ந்தன. பல்வேறு இடங்களில் மின் கம்பிகள் அறுந்து கீழே விழுந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.  
இதனை தொடர்ந்து நகரசபை உறுப்பினர் கஸ்தூரிபாய் தலைமையில் நகராட்சி பணியாளர்கள், மின்வாரிய பணியாளர்கள் வேரோடு சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி மின் இணைப்பை சரி செய்து, மின் வினியோகத்தை சீரமைத்தனர். இதேபோல் சீர்காழி தென்பாதி, ஈசானிய தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் சாய்ந்து கிடந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, மின் வினியோகம் வழங்கப்பட்டது. 

வைத்தீஸ்வரன்கோவில்

வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட அக்ரஹார தெருவில் உள்ள மரங்கள் சாய்ந்து மின் கம்பியில் விழுந்ததால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 
இதனைத்தொடர்ந்து பேரூராட்சி மற்றும் மின்வாரிய பணியாளர்கள் மரங்களை அப்புறப்படுத்தி மின் வினியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர். 

திருவெண்காடு

பூம்புகார், திருவெண்காடு ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை மேற்கண்ட பகுதிகளில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன. இதனைத் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரம் பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெயிலின் தாக்கம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டிய நிலையில் திடீரென மழை செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மழை பருத்தி பயிருக்கு மிகுந்த பயனை தரும். மேலும் கோடை உழவு செய்வதற்கு இந்த மழை உதவும்’ என்றனர். இந்த மழையின் காரணமாக நேற்று அதிகாலை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின் வயர்களை சீரமைத்து, மின் வினியோகம் கிடைக்க நடவடிக்கை எடுத்தனர். 

Next Story