தென்னை மரங்களில் வெள்ளை ஈ நோய் தாக்குதல்


தென்னை மரங்களில் வெள்ளை ஈ நோய் தாக்குதல்
x
தினத்தந்தி 8 May 2022 12:00 AM IST (Updated: 7 May 2022 10:52 PM IST)
t-max-icont-min-icon

வாய்மேடு, தலைஞாயிறு பகுதிகளில் தென்னை மரங்களில் வெள்ளை ஈ நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாய்மேடு:
வாய்மேடு, தலைஞாயிறு பகுதிகளில் தென்ைன மரங்களில் வெள்ளை ஈ நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கஜா புயல்
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி, தாணிக்கோட்டகம், துளசியாப்பட்டினம், தலைஞாயிறு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 3 லட்சம் தென்னங்கன்றுகளை தமிழக அரசு வழங்கியது. இதனை விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி மிகுந்த சிரமப்பட்டு தென்னங்கன்றுகளை நட்டு வளர்த்து வந்தனர். இந்த தென்னங் கன்றுகளிலும், புயலுக்கு தப்பிய ஒரு சில தென்னை மரங்களிலும் காண்டாமிருக வண்டு தாக்குதல் ஏற்பட்டது.
வெள்ளை ஈ நோய் தாக்குதல்
இந்த தாக்குதலில் அரசு வழங்கிய தென்னங்கன்றுகள் பாதி அழிந்து விட்டன. இந்த நிலையில் தற்போது புதுவித நோயாக வெள்ளை ஈ நோய் தாக்குதலால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வேதாரண்யம் தாலுகா முழுவதும் உள்ள தென்னை மரங்களில் இந்த நோய் பரவலாக காணப்படுகிறது. நோய் தாக்குதலுக்கு உள்ளான தென்னை மரங்கள் ஆயிரக்கணக்கில் கருகிவிட்டன.
இதுகுறித்து பலமுறை வேளாண்மை அலுவலகத்தில் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தாக்குதலுக்கு உள்ளான தென்னந்தோப்புகளை வேளாண்மை துறை அதிகாரிகள் இதுவரை வந்து பார்வையிட்டு ஆய்வு செய்யவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
முற்றுகை போராட்டம்
கஜா புயலில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் வெள்ளை ஈ நோய் தாக்குதலால் தென்னை சாகுபடி முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு  ஆலோசனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். எங்களை அலட்சியப்படுத்தினால் தங்களது குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை வேளாண்மை துறை அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தென்னை விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Next Story