பரமத்தியில் கடன் தகராறு காரணமாக இலங்கை தமிழருக்கு பீர்பாட்டில் குத்து-பெயிண்டருக்கு வலைவீச்சு
பரமத்தியில் கடன் தகராறு காரணமாக இலங்கை தமிழரை பீர்பாட்டிலால் குத்திய பெயிண்டரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பரமத்திவேலூர்:
இலங்கை தமிழர்
பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் சாலமன்ராஜா. இவருடைய மகன் ஜூட் (வயது 36). பெயிண்டர். இவரும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டரான விஜயனும் நண்பர்கள் ஆவர். ஜூட் தனது குடும்ப செலவுக்காக விஜயனிடம் ரூ.1 லட்சம் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது.
பெற்ற கடனுக்கு ஜூட் வட்டி மட்டுமே செலுத்தி வந்ததாகவும், அசல் தொகையை கொடுக்கவில்லை என்றும் தெரிகிறது. இதனால் விஜயன் அசல் தொகையையும் கொடுக்குமாறு கூறியதால், அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
பீர்பாட்டிலால் குத்து
இந்தநிலையில் நேற்று முன்தினம் பரமத்தி டாஸ்மாக் கடை பாரில் ஜூட் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விஜயன் கடன் தொகையை கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த விஜயன் அங்கிருந்த பீர்பாட்டிலை உடைத்து, ஜூட்டின் கழுத்தில் குத்தினார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
பீர் பாட்டிலால் குத்தியதில் ஜூட் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வலைவீச்சு
இதுகுறித்து பரமத்தி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜூட்டை பீர்பாட்டிலால் குத்திய பெயிண்டர் விஜயனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பரமத்தியில் கடன் பிரச்சினை காரணமாக இலங்கை தமிழர் பீர்பாட்டிலால் குத்தப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story