தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி
தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
விராலிமலை:
விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் கடந்த சில வாரங்களாக வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணியானது நடைபெற்று வந்தது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு பேரிடர் காலங்களில் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது குறித்த சிறப்பு பயிற்சி இன்று கசவனூரில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விராலிமலை தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். இதில் தேர்வு செய்யப்பட்ட 40 தன்னார்வலர்களுக்கு பேரிடர் காலங்களில் பொதுமக்களை மீட்பது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியினை இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அளித்தனர்.
இதேபோல் திருமயம் அருகே மேலப்பனையூர் ஊராட்சியில், திருமயம் தீயணைப்பு துறை சார்பில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. திருமயம் தாசில்தார் பிரவீனா மேரி தலைமை தாங்கினார். மேலப்பனையூர் ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன் முன்னிலை வகித்தார். இதனைத்தொடர்ந்து தன்னார்வலர்களுக்கு தீயணைப்புத்துறையினர் பயிற்சி அளித்தனர். பின்னர் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மணமேல்குடி தாலுகாவில் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு தண்டலை மற்றும் கிருஷ்ணாஜிபட்டினம் ஆகிய கிராமங்களில் நடைபெற்றது. பயிற்சிக்கு மணமேல்குடி தாசில்தார் ராஜா தலைமை தாங்கினார். இதில் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் வருவாய் ஆய்வாளர் முத்தரசு, கிராம நிர்வாக அலுவலர் காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story