போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் மாரியம்மன் கோவிலில் பூத்தட்டு ஊர்வலம் நடத்த வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை


போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் மாரியம்மன் கோவிலில் பூத்தட்டு ஊர்வலம் நடத்த வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
x
தினத்தந்தி 10 May 2022 7:05 PM GMT (Updated: 2022-05-11T00:35:13+05:30)

மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் பூத்தட்டு ஊர்வலம் நடத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு தேவராஜ் அறிவுரை வழங்கினார்.

கரூர், 
மாரியம்மன் கோவில்
கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த திருவிழா கடந்த 8-ந் தேதி கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) பூத்தட்டு ஊர்வலம் நடைபெறுகிறது. 
இதையடுத்து, 15-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியும், 23 மற்றும் 24-ந் தேதிகளில் பக்தர்கள் அமராவதி ஆற்றங்கரையில் இருந்து அக்னிச்சட்டி, பால்குடம் ஏந்தியும், அலகு குத்தி தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். 25-ந் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியும், அதனையொட்டி ஆற்றங்கரையில் வாணவேடிக்கையும் நடைபெறுகிறது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமராவதி ஆற்றங்கரையில் ஒன்றுகூட உள்ளதால் ஆற்றங்கரையில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் முட்புதர்களை அகற்றும் பணி தற்போது மும்முரமாக நடைெபற்று வருகிறது. மேலும் மண்ணை சமன்படுத்தும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் நடைபெற்று வருகிறது.
ஆலோசனை கூட்டம்
இந்தநிலையில், பூத்தட்டு ஊர்வலத்தையொட்டி விழா கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தலைவர் மதன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் கலந்து கொண்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார் பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-
பூத்தட்டு ஊர்வலத்தில் தாந்தோணிமலை, வெங்கமேடு, வையாபுரி நகர், பசுபதிபாளையம், சின்னஆண்டாங்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் ஊர்வலம் நடைபெறும். இவ்வாறு நடைபெறும் நிகழ்வில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விழாவை நடத்த வேண்டும். இரவு 7 மணி முதல் பூத்தட்டு ஊர்வலம் நடைபெறுவதால் பல பகுதிகளில் இருந்து வரும் பூத்தட்டுகள் ஜவஹர்பஜார் வழியாக சென்று கோவிலை அடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 
போக்குவரத்துக்கு இடையூறு
ஒவ்வொரு பூ தட்டுக்கும் குறிப்பிட்ட இடைவெளியை கடைபிடித்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செல்ல வேண்டும். இவ்வாறு செல்லும் போது மின் கம்பிகள் உள்ள இடங்களில் கவனமுடன் செல்ல வேண்டும். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்படுவதுடன், ரதத்திற்கு பின்னால் வரும் ஜெனரேட்டர் மீதோ அல்லது ஜெனரேட்டர் உள்ள வாகனத்திலோ ஆட்கள் அமர்வதை தடுக்க வேண்டும். இரவு 2 மணிக்குள் அனைத்து பூத்தட்டுகளும் வந்தடையும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், கமிட்டி செயலாளர் பாலன், பொருளாளர் ரமேஷ், கவுரவ தலைவர் மேலை பழனியப்பன், இன்ஸ்பெக்டர்கள் செந்தூர் பாண்டியன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story