கர்நாடக மேல்-சபையில் காலியாகும் 7 இடங்களுக்கு ஜூன் 3-ந் தேதி தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு


கர்நாடக மேல்-சபையில் காலியாகும் 7 இடங்களுக்கு ஜூன் 3-ந் தேதி தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 May 2022 2:19 AM IST (Updated: 11 May 2022 2:19 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மேல்-சபையில் காலியாகும் 7 இடங்களுக்கு வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பெங்களூரு:

3-ந் தேதி தேர்தல்

  கர்நாடக மேல்-சபையில் உறுப்பினர்களாக இருக்கும் லட்சுமண் சவதி, ஆர்.திம்மாபூர், அல்லும் வீரபத்ரப்பா, எச்.எம்.ரமேஷ்கவுடா, வீணா அச்சய்யா, நாராயணசாமி, லெகர் சிங் ஆகிய 7 பேரின் பதவி காலம் வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதி நிறைவடைகிறது. அவர்கள் அனைவரும் எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். இதையடுத்து அந்த 7 எம்.எல்.சி. இடங்களுக்கும் வருகிற ஜூன் மாதம் 3-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  இதற்கான மனு தாக்கல் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. மனுக்களை தாக்கல் செய்ய 24-ந் தேதி கடைசி நாள் ஆகும். 25-ந் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. 27-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். போட்டி இருந்தால் வருகிற 3-ந் தேதி(வெள்ளிக்கிழமை) ஓட்டுப்பதிவு நடைபெறும். இந்த ஓட்டுப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். அதைத்தொடர்ந்து அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 7-ந் தேதி தேர்தல் பணிகள் நிறைவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தனிப்பெரும்பான்மை

  இந்த தேர்தல் பணிகளின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்கிறார்கள். பதவிக்காலம் முடியும் 7 பேர்களில் ஆர்.திம்மாபூர், அல்லும் வீரபத்ரப்பா, வீணா அச்சய்யா ஆகிய 3 பேரும் காங்கிரசை சேர்ந்தவர்கள். லட்சுமண் சவதி, லெகர்சிங் ஆகியோர் பா.ஜனதா மற்றும் எச்.எம்.ரமேஷ்கவுடா, நாராயணசாமி ஆகியோர் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்தவர்கள்.

  தற்போது கர்நாடக சட்டசபையில் உள்ள கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் பார்த்தால், ஆளும் பா.ஜனதாவுக்கு 4 இடங்களும், காங்கிரசுக்கு 2 இடங்களும், ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story