ரூ.1¼ கோடியில் சிறு பாலம் அமைக்கும் பணி


ரூ.1¼ கோடியில் சிறு பாலம் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 11 May 2022 1:24 PM GMT (Updated: 2022-05-11T18:54:19+05:30)

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் தடையின்றி செல்ல ரூ.1¼ கோடியில் சிறு பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் தடையின்றி செல்ல ரூ.1¼ கோடியில் சிறு பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வேங்கிக்கால் ஏரி

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் வேங்கிக்கால் ஏரி உள்ளது. கடந்த ஆண்டு பெய்த மழையின் போது, வேங்கிக்கால் ஏரி நிரம்பி மழைநீர் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள சாலையில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

இதுமட்டுமின்றி வேங்கிக்கால் ஏரியில் வெளியேறிய உபரிநீர் மூலம் அவலூர்பேட்டை சாலை வழியாக சென்று திண்டிவனம் சாலையில் உள்ள நொச்சிமலை ஏரி நிரம்பி குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்தது. உபரிநீர் செல்வதற்கு போதிய கால்வாய் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்தது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின் பேரில் திருவண்ணாமலை கோட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அதைத்தொடர்ந்து வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் தடையின்றி வெளியேறும் வகையில் ஏரியின் எதிரில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் சிறிய பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.

அதிகாரிகள் ஆய்வு

அதுமட்டுமின்றி வேங்கிக்கால் ஏரியில் இருந்து உபரிநீர் செல்லும் வழிதடத்தில் நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட பகுதியில் கல்வெட்டு அமைக்கும் பணிகளும் தொடங்கி உள்ளது. 

வேங்கிக்கால் ஏரி அருகில் சிறுபாலம் அமைக்கும் பணியை திருவண்ணாமலை கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் முரளி மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

அப்போது உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் கலைமணி, சாலை ஆய்வாளர் பச்சையப்பன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘வேங்கிக்கால் ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீர் தடையின்றி செல்லும் வகையில் சிறு பாலம், கல்வெட்டு அகலப்படுத்தி அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் 2 மாதங்களில் நிறைவு பெறும்’ என்றனர். 

Next Story