அடையாள அட்டைகளை தரையில் போட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


அடையாள அட்டைகளை தரையில் போட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 May 2022 4:32 PM GMT (Updated: 11 May 2022 4:32 PM GMT)

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அடையாள அட்டைகளை தரையில் போட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அடையாள அட்டைகளை தரையில் போட்டு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இந்தநிலையில் அறிவித்தபடி நேற்று அவர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே ஒன்று திரண்டனர்.

அங்கு அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் வீரபாண்டியன், கோபாலராஜேந்திரன், சங்கரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் நம்புராசன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், தகுதியில்லாதவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது. அதை தடுத்து, அடையாள அட்டை வழங்க காரணமாக இருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பினர்.

அடையாள அட்டை

அப்போது, தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையை அவர்கள் சாலையில் போட்டனர். மேலும் அவர்கள் அங்கேயே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனை சந்தித்து கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், கருணாகரன், முத்துக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story