ஒவ்வொரு குக்கிராமமும் வளர்ச்சியடைய அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் மோகன் உத்தரவு

ஒவ்வொரு குக்கிராமமும் வளர்ச்சியடைய அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் 100 சதவீதம் அடிப்படை உட்கட்டமைப்பை ஏற்படுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தில் அரசின் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து கிராமங்களின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டப்பணிகளையும் மேற்கொள்ள உள்ளன.
கிராம ஊராட்சிகளில் குக்கிராமங்களின் எண்ணிக்கை மற்றும் மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து தனிநபர் வாழ்க்கைத்தர குறியீட்டை மேம்படுத்தும் வகையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
143 ஊராட்சிகளில்...
விழுப்புரம் மாவட்டத்தில் 2021 -2022-ம் ஆண்டில் 13 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 136 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி, கிராமத்தின் வளர்ச்சிக்கும், தனிநபர் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பயன்படுத்தும் வகையில் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
குக்கிராமங்களின் வளர்ச்சி
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் சுத்தமான கிராமத்தினை ஏற்படுத்துவதே ஆகும். எனவே ஒவ்வொரு ஊராட்சியிலும் 100 சதவீதம் திடக்கழிவு மேலாண்மை மற்றும் திரவக்கழிவு மேலாண்மை செயல் திட்டம் அமைத்திட வேண்டும்.
அதுபோல் தனிநபர் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் கைவினைஞர் பணிமனைகள், காளான் வளர்ப்பு கொட்டகைகள், பட்டு வளர்ப்பு கொட்டகைகள், பால் கொள்முதல் நிலையங்கள் போன்ற பணிகள் மேற்கொள்ளலாம்.
இவ்வாறு ஒவ்வொரு ஊராட்சியிலும் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் குக்கிராமங்களின் வளர்ச்சி மேம்படுவதுடன் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.
எனவே அனைத்துத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து இத்திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், வேளாண் இணை இயக்குனர் ரமணன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story