கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வந்த தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி உள்பட 6 பேர் கைது சேலத்தில் பரபரப்பு


கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வந்த தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி உள்பட 6 பேர் கைது சேலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 11 May 2022 10:09 PM GMT (Updated: 2022-05-12T03:39:53+05:30)

சேலத்தில் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த வந்த தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம், 
ஆர்ப்பாட்டம்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த தமிழக கவர்னரை கண்டித்து தமிழ் புலிகள் கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 
இதனால் அங்கு போலீஸ் துணை கமிஷனர் மோகன்ராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கவில்லை.
6 பேர் கைது
இந்த நிலையில், தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த சேலம் மத்திய மாவட்ட செயலாளர் உதய பிரகாஷ் (வயது 36) மற்றும் நிர்வாகிகள் வெங்கடேஷ், பிரபு, ராவண பிரபு, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த இஸ்மாயில், சாகுல் ஹமீது ஆகிய 6 பேர் நேற்று கவர்னரை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வந்தனர். அப்போது, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக கூறி அவர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி டவுன் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர். 
கவர்னரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதாக தமிழ் புலிகள் கட்சி நிர்வாகி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story