நோயாளிகளுக்கு சேவை செய்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறோம்


நோயாளிகளுக்கு சேவை செய்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறோம்
x
தினத்தந்தி 13 May 2022 1:06 AM IST (Updated: 13 May 2022 1:06 AM IST)
t-max-icont-min-icon

நோயாளிகளுக்கு சேவை செய்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறோம் என செவிலியர்கள் கூறினர்.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டம் முழுவதும் நேற்று செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. அவர்களுக்கு பல்வேறு அமைப்பினர் வாழ்த்துகள் தெரிவித்தனர். செவிலியர் பணி குறித்து அவர்கள் கூறியதாவது:- 
பெரும் பாக்கியம் 
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் ரேவதி கூறியதாவது:- 
எனக்கு 27 ஆண்டுகள் பணி நிறைவடைந்துள்ளது. செவிலியர் பணியில் அன்பும் அர்ப்பணிப்புமே முக்கிய பங்கு வகிக்கிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பணி மேற்கொள்வதில் மிகுந்த சிரமங்கள் இருந்த நிலையில் தற்போது மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்ந்துள்ளதால் உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே நோயாளிகளுக்கு சிறப்பான சேவை செய்வதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மூத்த செவிலியராக இருந்தாலும் இரவு பணியை மேற்கொள்கிறேன்.
 எந்நேரமாக இருந்தாலும் நோயாளிகளுக்கு சேவை செய்வதை பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன். நாங்கள் அன்பாக நடந்து கொள்வதிலிருந்து நோயாளிகளும் தங்களுடைய பிரச்சினைகளை மனம்விட்டு சொல்லும் நிலையில் நாங்கள் அவர்களுக்கு ஆறுதலாக உள்ளோம். அது எங்களுக்கு மனநிறைவை தருகிறது.
அர்ப்பணிப்பு உணர்வு
தலைமை செவிலியர் சியாமளா:- 
செவிலியர் தினத்தையொட்டி காலை பணிக்கு வந்தவுடன் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். செவிலியர் பணியை மேற்கொள்வது மிகுந்த மனநிறைவை தருகிறது. எல்லோருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. அர்ப்பணிப்பு உணர்வுடன் இந்த பணியை மேற்கொண்டு வருகிறோம்.
 பணிக்கு வந்தவுடன் குடும்பத்தை நினைப்பதில்லை. அன்பும், அர்ப்பணிப்பு உணர்வும் இப்பணிக்கு மிக முக்கியமானதாகும். அந்த வகையில் இந்த பணியை செய்வது எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது. 
நோயாளிகளுக்கு சேவை செய்வதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். 

Next Story