பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 May 2022 6:59 PM IST (Updated: 13 May 2022 7:00 PM IST)
t-max-icont-min-icon

பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பழனி:
பழனி அருகே சித்தரேவு கிராமத்தில் உச்சிகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழிபடுவது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இந்நிலையில் கொங்கு மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் அந்த அமைப்பினர், சித்தரேவு பகுதி மக்கள் என ஏராளமானோர் இன்று பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் உச்சிகாளியம்மன் கோவில் அமைந்துள்ள நிலத்தை அளவீடு செய்யக்கோரி முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து வந்த ஆர்.டி.ஓ. சிவக்குமார் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதி மக்கள் நிதி பங்களிப்புடன் நிலம் வாங்கி கோவில் கட்டப்பட்டது‌. அதற்கான பட்டா, மின்இணைப்பு ஆகிய ஆவணங்கள் உள்ளன. இந்நிலையில் கோவில் அமைந்துள்ள இடம் அரசு நிலம் என்று தெரிவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, எனவே கோவில் அமைந்துள்ள இடத்தை நிலஅளவீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதையடுத்து ஆர்.டி.ஓ. சிவக்குமார், வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) கோவில் நிலம் அளவீடு செய்யப்படும். கோவிலில் வழிபடுவது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story