குத்தாலம் ஒன்றியக்குழு கூட்டம்

குத்தாலம் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது
குத்தாலம்
குத்தாலம் ஊராட்சி ஒன்றியக்குழுவின் சாதாரண கூட்டம் அவைக்கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கஜேந்திரன், துணைத்தலைவர் முருகப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 46 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் மேலாளர் சாந்தி, பொறியாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாய்க்காலில் ஆக்கிரமிப்பு
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:-
லட்சுமி (தி.மு.க.): மாதிரிமங்கலம் ஊராட்சியில் குப்பை ஏற்றிச் செல்லும் வாகனத்தை பழுது பார்க்க வேண்டும். கீழவெளி மஞ்சளாற்றில் புதிய படித்துறை, பாலம் கட்ட வேண்டும்.
வினோத் (பா.ஜ.க.): செம்பியன் கோமலில் ரேஷன் கடை கட்டித் தரவேண்டும்.
பாஸ்கரன் (அ.தி.மு.க.): கீழபெரம்பூரில், கிளியனூரிலிருந்து வரும் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
ராமதாஸ் (தி.மு.க.): ஆலங்குடி ஊராட்சியில் அங்காடி கட்டும் பணியை விரைவு படுத்த வேண்டும்.
சிவக்குமார் (பா.ம.க.): கோனேரிராஜபுரம் வட்டார சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: உறுப்பினர்களின் கோரிக்கைகள் நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றி தரப்படும் என்றார்.
பா.ஜ.க. உறுப்பினர் வெளிநடப்பு
கூட்டத்தில், பா.ஜ.க.வை சேர்ந்த 18-வது வார்டை சேர்ந்த வினோத் தான் பேசும்போது குறுக்கீடு செய்ததாக கூறி கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் அவர் ஒன்றிய அலுவலக வாசலில் பா.ஜ.க. தொண்டர்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒன்றிய தலைவரை அவையை நடத்தவிடாமல், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அவையை நடத்துகிறார். கூட்டத்தில் உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிப்பதில்லை என்று தர்ணாவில் ஈடுபட்டார்.
அவரிடம் குத்தாலம் தாசில்தார் கோமதி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இனிவரும் காலங்களில் உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு உரிய பதில் அளிக்க அறிவுறுத்தப்படும் என்று கூறியதன்பேரில், தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story