ரத்தக்காயத்துடன் கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர்


ரத்தக்காயத்துடன் கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர்
x
தினத்தந்தி 15 May 2022 6:31 PM IST (Updated: 15 May 2022 6:31 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே ரத்தக்காயத்துடன் வாலிபர் கிணற்றில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்து வீசப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வேலூர்

வேலூர் அருகே ரத்தக்காயத்துடன் வாலிபர் கிணற்றில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்து வீசப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிணற்றில் வாலிபர் பிணம்

வேலூரை அடுத்த கருகம்பத்தூர் பாலாற்றையொட்டி விவசாய கிணறு உள்ளது. இந்த கிணற்றில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 அதன்பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, விரிஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலவழகன் மற்றும் போலீசார் அங்கு சென்று கிணற்றில் மிதந்த வாலிபரின் பிணத்தை மீட்டனர்.

வாலிபரின் தலை மற்றும் உடலில் ஆங்காங்கே காயங்கள் காணப்பட்டன. அந்த நபர் குறித்து போலீசார் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் வாலிபர் குறித்து எவ்வித விவரமும் கிடைக்கவில்லை. அதையடுத்து போலீசார் அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையா? போலீஸ் விசாரணை

இதுதொடர்பாக விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்?, வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரை கொலை செய்து மர்மநபர்கள் கிணற்றில் வீசினார்களா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், கிணற்றில் மிதந்த வாலிபர் இறந்து ஓரிரு நாட்கள் ஆகியிருக்கலாம். அவர் சிகப்பு கலர் சட்டையும், கருப்பு நிற பேண்டும் அணிந்திருந்தார். வாலிபரின் தலையில் பலத்த காயம் காணப்பட்டது. மர்மநபர்கள் அவரை அடித்து கொலை செய்து கிணற்றில் வீசி சென்றார்களா என்றும், கிணற்றில் குதித்தபோது ஏற்பட்ட காயமா என்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

Next Story