தக்காளி விலை கிடு,கிடு உயர்வு; கிலோ ரூ.80-க்கு விற்பனை


தக்காளி விலை கிடு,கிடு உயர்வு; கிலோ ரூ.80-க்கு விற்பனை
x
தினத்தந்தி 16 May 2022 1:36 AM IST (Updated: 16 May 2022 1:36 AM IST)
t-max-icont-min-icon

தக்காளி விலை கிடு,கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனையாகி வருகிறது.

பெரம்பலூர், 
தக்காளி
இல்லதரசிகளின் சமையலறையில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது கோடைகாலம் என்பதால் விளைச்சல் பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்து வருகிறது. மேலும் வடமாநிலங்களில் வரும் தக்காளியின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை கிடு,கிடுவென உயா்ந்துள்ளது.
பெரம்பலூர்-அரியலூரில் கடந்த வாரம் மார்க்கெட், உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.50-க்கு விற்ற தக்காளி, தற்போது கிலோ ரூ.80-க்கு விற்பனையாகி வருகிறது.
இல்லத்தரசிகள் கவலை
இன்னும் சில நாட்களில் 100-ஐ தொட்டு விடும் நிலையில் உள்ளது. ஏற்கனவே சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வினால் கவலையில் உள்ள இல்லத்தரசிகள், தற்போது தக்காளி விலை உயர்வினால் மிகுந்த கவலையில் உள்ளனர். பெரும்பாலானோர் சமையலில் தக்காளியை தவிர்த்து வருகின்றனர்.
சாலையோரங்களில் சரக்கு வாகனங்களில் மொத்தமாக குவித்து வைத்து விற்பனை செய்யப்படும் தக்காளி கடந்த சிலவாரங்களுக்கு முன்பு 5 கிலோ ரூ.100-க்கு கூவி, கூவி விற்ற விலையில், விலை உயர்வினால் இந்த வாரம் 2 கிலோ ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மற்ற காய்கறிகள் விலை விவரம்
இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.30-க்கு விற்ற முருங்கைக்காய் இந்த வாரம் இருமடங்கு விலை உயர்ந்து ரூ.60-க்கு விற்பனையாகிறது. கிலோ ரூ.40-க்கு விற்ற பாகற்காய் தற்போது ரூ.80-க்கு விற்பனையாகிறது. ரூ.10-க்கு விற்ற ஒரு சுரைக்காய் தற்போது ரூ.20-க்கும், கடந்த வாரம் கிலோ ரூ.60-க்கு விற்ற பீன்ஸ், அவரைக்காய் தற்போது ரூ.120-க்கும் விற்பனையாகிறது. 
விலை உயர்வினால் பீர்க்கங்காய் வரத்து இல்லை. விலை ஏற்றம் இல்லாமல் கத்தரிக்காய் கிலோ ரூ.30-க்கும், கேரட் கிலோ ரூ.60-க்கும், மாங்காய், உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், சவ்சவ், பீட்ரூட் ஆகியவை கிலோ தலா ரூ.40-க்கும் விற்பனையாகி வருகிறது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் தலா ஒரு கிலோ ரூ.20 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
இன்னும் உயர வாய்ப்பு
சில்லறை விற்பனை கடைகளில் காய்கறிகள் விலை இதை விட சற்று அதிகமாக விற்கப்படுகிறது. கோடை காலத்தில் தமிழகத்தில் காய்கறிகளின் உற்பத்தி குறைவு என்பதால், வடமாநிலங்களில் இருந்து தான் காய்கறிகள் வருகிறது. இதனால் தமிழகத்தில் காய்கறிகளின் விலை இன்னும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Next Story