போலீஸ்போல் நடித்து லாரி டிரைவரை மிரட்டி பணம் பறிப்பு

கோவை அருகே வாகன சோதனை நடத்தி போலீஸ் போல் நடித்து லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகிறார்கள்.
கோவை
கோவை அருகே வாகன சோதனை நடத்தி போலீஸ் போல் நடித்து லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
லாரி டிரைவர்
கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து ஒடிசா மாநிலத்துக்கு சோலார் பேனல் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரியை சென்னை மதுரவாயலை சேர்ந்த நாகராஜன் (வயது 45) என்பவர் ஓட்டிச்சென்றார். அந்த லாரி நேற்று அதிகாலை 1.30 மணியளவில் மதுக்கரை அருகே உள்ள எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது ரோட்டின் ஓரத்தில்இருந்த ஒரு ஓட்டலில் நாகராஜன் லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார். அப்போது அங்கு 4 பேர் வந்தனர். அவர்கள் நாகராஜனிடம் நாங்கள் குற்றப்பிரிவு போலீஸ் என்றும் உன் மீது சந்தேகம் இருக்கிறது.எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டு உள்ளனர். உடனே அவர் விவரத்தை கூறினார்.
போலீஸ் போல் நடித்து பணம் பறிப்பு
அதற்கு அவர்கள் உனது லாரி, சரக்கு குறித்த விவரம், லாரி பெர்மிட் ஆகிய ஆவணங்களை கொண்டு வா என்று கூறி உள்ளனர். உடனே அவரும் ஆவணங்களை எடுத்துச்சென்று அவர்களிடம் கொடுத்து உள்ளனர். அதற்கு அவர்கள் சரியான ஆவணங்கள் இல்லை, எனவே வழக்குபோட வேண்டும். பணம் கொடுத்தால் வழக்கு போட மாட்டோம் என்று கூறி பணம் கேட்டு உள்ளனர்.
ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், 4 பேரும் சேர்ந்து அவரை தாக்கியதுடன், அவர் சட்டைப்பையில் இருந்த ரூ.1,100-ஐ பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த நாகராஜன் இது குறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்தார். அப்போதுதான் அவர்கள் போலீஸ் இல்லை என்றும், போலீஸ் போன்று நடித்து பணம் பறித்ததும் தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்த 4 பேரையும் பிடிக்க இன்ஸ்பெக்டர் வைரம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குப்புராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் நாகராஜன் கூறிய அடையாளங்களை வைத்து அந்த 4 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் மதுக்கரை மார்க்கெட் பகுதியில் சந்தேகத்தின்பேரில் சுற்றிய 3 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர்கள், கோவை ஆத்துபாலம் பகுதியை சேர்ந்த முகமது அலி (43), பாஷா (40), சம்சுதீன் (36) என்பதும், வாகன சோதனை நடத்தி நாகராஜனிடம் போலீஸ் என்றுக்கூறி மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.
3 பேர் கைது
இதையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்ததுடன், தலைமறைவான அசார் என்பவரை வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் கொச்சி சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
எனவே இந்த சாலையில் இதுபோன்று 4 பேரும் சேர்ந்து வேறு யாரிடமாவது போலீஸ் எனக்கூறி மிரட்டி பணம் பறித்து உள்ளனரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவம் நடந்த சில மணி நேரத்திலேயே கும்பலை பிடித்த இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
Related Tags :
Next Story