தொடர் மழை எதிரொலி: கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு 5 மாவட்ட மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 5 மாவட்ட மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
தொடர் மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 5 மாவட்ட மக்களுக்கு 2-வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரையில் வெயில் சுட்டெரித்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக கடந்த சில நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள், குட்டைகளில் தண்ணீர் நிரம்பி வருகிறது. நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விடிய, விடிய மழை பெய்தது.
வெள்ள அபாய எச்சரிக்கை
தொடர் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 280 கன அடியாக இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று வினாடிக்கு 741 கன அடியாக அதிகரித்தது. நேற்று மாலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 48.05 அடியாகும். பொதுவாக அணை நீர்மட்டம் 48 அடியை எட்டினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவது வழக்கம்.
தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகமாக உள்ளதால் தென்பெண்ணை ஆற்றில் எந்த நேரமும் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது. இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்று கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு 2-வது நாளாக நேற்று மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மழை அளவு
பொதுமக்கள் யாரும் தென்பெண்ணை ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பாரூர்-73, பெனுகொண்டாபுரம்- 55.40, தேன்கனிக்கோட்டை- 54, சூளகிரி- 40, கிருஷ்ணகிரி- 38.80, ஓசூர்- 37, போச்சம்பள்ளி- 30.20, நெடுங்கல்- 30, ராயக்கோட்டை- 27, ஊத்தங்கரை- 13, அஞ்செட்டி- 8.60, தளி- 5 என மாவட்டம் முழுவதும் 412 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
Related Tags :
Next Story