வட மாநில வாலிபர் போக்சோவில் கைது

வட மாநில வாலிபர் போக்சோவில் கைது
பேரூர்
பேரூர் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட மாநில வாலிபரை பேரூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
வடமாநில வாலிபர்
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் நஜிபுல் இஸ்லாம் (வயது 23). இவர் தொண்டாமுத்தூர் பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இவரது வீட்டின் அருகே வசிக்கும் 9 வயது சிறுமி, இவரிடம் குடிக்க தண்ணீர் கேட்டு உள்ளார். இதையடுத்து நஜிபுல் இஸ்லாம் அந்த சிறுமிக்கு வீட்டில் இருந்து தண்ணீரை எடுத்து கொடுத்தார்.
அப்போது அவர் திடீரென்று அந்த சிறுமியின் வாயைப் பொத்தி வீட்டிற்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி பயத்தில் சத்தம் போட்டார்.
சிறுமியின் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் நஜிபுல் இஸ்லாமிடம் இருந்து அந்த சிறுமியை மீட்டனர். பின்னர் அவரை கண்டித்து எச்சரித்து விட்டு, அங்கிருந்து சென்றனர்.
மற்றொரு சிறுமி
இந்த சம்பவம் நடந்து சிறிது நேரம் கழித்து நஜிபுல் இஸ்லாம் மீண்டும் அதே பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை மிரட்டி அங்கு உள்ள புதர் பகுதிக்கு அழைத்து சென்றார். இதனால் அச்சம் அடைந்த அந்த சிறுமி சத்தம் போட்டு அழுது உள்ளார். இதனால் பயந்த நஜிபுல் இஸ்லாம், அந்த சிறுமியை விட்டு, விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த வழியாக சென்றவர்கள் அழுது கொண்டிருந்த அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு, நடந்ததை கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பரபரப்பு
இதுகுறித்து பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளின் பெற்றோர்களும் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் நஜிபுல் இஸ்லாமை கைது செய்தனர்.
பின்னர், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 2 சிறுமிகளுக்கு வட மாநில வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story