பின்னலாடை நிறுவனங்கள் 2-வது நாளாக உற்பத்தி நிறுத்த போராட்டம்


பின்னலாடை நிறுவனங்கள் 2-வது நாளாக உற்பத்தி நிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 17 May 2022 9:20 PM IST (Updated: 17 May 2022 9:20 PM IST)
t-max-icont-min-icon

நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் அனைத்து பின்னலாடை நிறுவனங்கள் 2-வது நாளாக உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக மொத்தம் ரூ.360 கோடி பனியன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

திருப்பூர்
நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் அனைத்து பின்னலாடை நிறுவனங்கள் 2-வது நாளாக உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக மொத்தம் ரூ.360 கோடி பனியன் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
நூல் விலை அபரிமிதமாக உயர்வு
பின்னலாடை நகரான திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு நூல் முக்கிய மூலப்பொருளாகும். இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அபரிமிதமாக நூல் விலை உயர்ந்துள்ளதால் பனியன் தொழிலை தொடர முடியாத நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆடை உற்பத்தி செலவு அதிகரிப்பால் புதிய ஆர்டர்களை எடுக்கவும் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆடையின் விலை அதிகரிப்பால் வெளிநாட்டு மற்றும் வெளிமாநில ஆர்டர்கள் திருப்பூர் நோக்கி வருவது குறைந்துவிட்டது.
நூல் விலை உயர்வு காரணமாக, பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தின் உற்பத்தி 80 சதவீதமும், உள்நாட்டு ஆடை உற்பத்தி 60 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தொழிலாளர்களும் வேலையிழப்பை சந்தித்து வருகிறார்கள். பஞ்சு விலையேற்றமே நூல் விலை உயர காரணம் என்று நூற்பாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சு பற்றாக்குறையால் விலை அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1 கேண்டி பஞ்சு விலை ரூ.42 ஆயிரமாக இருந்தது. தற்போது 1 கேண்டி ரூ.1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
2-வது நாளாக உற்பத்தி நிறுத்தம்
உள்நாட்டில் பஞ்சு தட்டுப்பாட்டை தடுக்க பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். யூகபேர வணிகத்தில் இருந்து பஞ்சை நீக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் பஞ்சை சேர்க்க வேண்டும். உயர்த்தப்பட்ட நூல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர் கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி திருப்பூரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட சங்கத்தினர் ஆதரவு தெரிவித்து நேற்று முன்தினம் காலை போராட்டம் தொடங்கியது. நேற்று 2-வது நாளாக பின்னலாடை நிறுவனங்களின் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள், உள்நாட்டு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள், நிட்டிங், காம்பேக்டிங், சாய ஆலைகள், பவர்டேபிள், பிரிண்டிங் உள்பட ஜாப்ஒர்க் நிறுவனங்கள், அதை சார்ந்த நிறுவனங்கள் என 10 ஆயிரம் நிறுவனங்கள் இந்த உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றன. சில பகுதிகளில் ஒரு சில ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டன. போராட்டம் காரணமாக 10 லட்சம் தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலையிழந்தனர். நாளொன்றுக்கு ரூ.180 கோடி பனியன் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
ரூ.360 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு
காதர்பேட்டையில் செகண்ட்ஸ் பனியன் விற்பனை குடோன்கள், கடைகள் என 500-க்கும் மேற்பட்டவை உள்ளன. அதுபோல் பனியன் சந்தை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் உள்ளன. உற்பத்தி நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கடைகளும் நேற்று 2-வது நாளாக அடைக்கப்பட்டன. இதன் காரணமாக காதர்பேட்டை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சில கடைகள் மட்டும் திறந்து இருந்தன. லட்சுமி நகர் பகுதியில் காஜா பட்டன், நூல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் முழுவதும் மூடப்பட்டன. அதுபோல் பி.என்.ரோடு சாந்தி தியேட்டர் பின்புறம் உள்ள பகுதியில் ஜவுளி துணி விற்பனையாளர்களும் கடைகளை மூடி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டதால் தொழிலாளர்கள் நடமாட்டம் வீதியில் குறைந்தது. தொழிலாளர்கள் சிலர் வெறிச்சோடிய வீதியில் கிரிக்கெட் விளையாடி பொழுதை கழித்தனர். இதன்காரணமாக 2-வது நாளாக நேற்றும் மாநகரில் பிரதான சாலைகளில் இருசக்கர, நான்கு சக்கர வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்து காணப்பட்டது. வங்கிகளிலும் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. 2 நாட்கள் நடைபெற்ற உற்பத்தி நிறுத்த போராட்டம் காரணமாக திருப்பூர் பின்னலாடை உற்பத்தி ரூ.360 கோடிக்கு பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story