சாப்டூர் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்


சாப்டூர் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
x
தினத்தந்தி 18 May 2022 12:49 AM IST (Updated: 18 May 2022 12:49 AM IST)
t-max-icont-min-icon

சாப்டூர் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது.

பேரையூர்
சாப்டூர் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது.
கணக்கெடுப்பு
பேரையூர் அருகே உள்ள சாப்டூர் வனப்பகுதி கடந்த வருடம் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இந்த புலிகள் காப்பகம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டுமாடு, செந்நாய் உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன. இந்த காப்பகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலங்குகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 
தற்போது இந்த புலிகள் காப்பகத்தில் எத்தனை புலிகள் உள்ளது, அவற்றின் வாழ்வியல் குறித்து துல்லியமாக அறிவதற்காக வனப்பகுதியில் ஆங்காங்கே தானியங்கி கேமரா பொருத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. 
புலிகள்
வனப்பகுதியில் ஆங்காங்கே 55 இடங்களில் ஒவ்வொரு இடத்திலும், 2 கேமரா வீதம் 110 தானியங்கி கேமரா மரங்களில் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த பணியில் சாப்டூர் வனத்துறை அதிகாரி செல்லமணி தலைமையில் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உட்பட 40 பேர் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு இடத்திலும் எதிர், எதிரே உள்ள மரங்களில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. 
தானியங்கி கேமரா பொருத்தப்பட்ட இடத்தில் புலிகள் செல்லும்போது புகைபடமெடுக்கும், தொடர்ந்து புலிகள் அந்த இடத்தில் நின்றால் வீடியோ எடுக்கும் வசதிகள் இந்த கேமராக்களில் உள்ளது. ஒவ்வொரு வாரமும் தானியங்கி கேமராவில் உள்ள மெமரி கார்டுகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இதன் மூலம் 48 நாட்கள் புலிகள் நடமாட்டம் குறித்தும், எத்தனை புலிகள் உள்ளது என்பது குறித்தும் தெரிய வரும். 
இந்த கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் தேசிய புலிகள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கு ஆய்வு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து எத்தனை புலிகள் உள்ளன, அவற்றின் வாழ்வியல், நடமாட்டம் குறித்து துல்லியமாக தெரியவரும்.
நடமாட்டம்
இதுகுறித்து சாப்டூர் வனத்துறை அதிகாரி செல்லமணி கூறியதாவது, சாப்டூர் புலிகள் காப்பகத்தில் தற்போது புலிகள் குறித்த கணக்கெடுப்புக்கு வனப்பகுதியில் 55 இடங்களில் 110 தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் எத்தனை புலிகள் இந்த காப்பகத்தில் உள்ளது என்பது குறித்தும், அவற்றின் நடமாட்டம் குறித்தும் அறிய முடியும். 
வனப்பகுதியில் உள்ள படிவெட்டி, கேணி மேல்பகுதி, கம்பத்துமொட்டை, குளிராட்டி, ஊஞ்சல் கருப்பசாமி கோவில், பிலிகுண்டு, டேராபாறை, கொடிக்கால், மாங்காஊத்து, ஏழு மாடி, நிலப்பாறை சேம்பனூத்து, கோழிஊத்துபாறை, முருங்க சோனை, கணவாய், உள்பட 55 இடங்களில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு வருகிறது என்றார்.

Next Story