விபத்தில் கால் முறிவு: ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே வந்து பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர் நெல்லை அருகே உருக்கமான சம்பவம்


விபத்தில் கால் முறிவு: ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே வந்து  பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர் நெல்லை அருகே உருக்கமான சம்பவம்
x
தினத்தந்தி 18 May 2022 2:56 AM IST (Updated: 18 May 2022 2:56 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் கால் முறிவு ஏற்பட்டதால் ஸ்ட்ரெச்சரில் படுத்தப்படியே வந்து ஒரு மாணவர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்

பேட்டை:
விபத்தில் கால் முறிவு ஏற்பட்டதால் ஸ்ட்ரெச்சரில் படுத்தப்படியே வந்து ஒரு மாணவர் பிளஸ்-2 தேர்வு எழுதினார்.
நெல்லை அருகே நடந்த உருக்கமான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
விபத்தில் கால் முறிவு
நெல்லையை அடுத்த பேட்டை எம்.ஜி.பி. 5-வது வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ஹக்கீம். கராத்தே மாஸ்டர். இவருடைய மகன் பீர்முகம்மது அசாருதீன் (வயது 17). 
இவர் பேட்டை காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 13-ந்தேதி இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, கார் மோதிய விபத்தில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தேர்வு எழுதினார்
இந்த நிலையில் பிளஸ்-2 கணித தேர்வு நேற்று நடந்தது. ஏற்கனவே அனைத்து பாடத்தேர்வுகளையும் எழுதிய பீர் முகம்மது அசாருதீன் கணித தேர்வையும் எழுத திட்டமிட்டார்.
இதையடுத்து அவரை ஆம்புலன்சில் ஸ்ட்ரெச்சரில் வைத்து பேட்டை காமராஜர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு ஸ்ட்ரெச்சரில் படுத்து கிடந்தவாறே பீர் முகம்மது அசாருதீன் ஆர்வமுடன் தேர்வு எழுதினார். இதை பார்க்க உருக்கமாக இருந்தது.
காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையிலும், பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவரை அனைவரும் பாராட்டினர்.

Next Story