மனநல பிரச்சினை காரணமாக கர்நாடகத்தில் கடந்த ஆண்டு 1,788 பேர் தற்கொலை


மனநல பிரச்சினை காரணமாக கர்நாடகத்தில் கடந்த ஆண்டு 1,788 பேர் தற்கொலை
x

மனநல பிரச்சினை காரணமாக கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2021) 1,788 பேர் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

1,788 பேர் தற்கொலை

தேசிய குற்ற ஆவண காப்பகம் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் நடக்கும் விபத்துகள், கொலைகள், தற்கொலைகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் தேசிய குற்ற ஆவண காப்பகம் கர்நாடகத்தில் கடந்த ஆண்டின் (2021) தற்கொலை சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு மனஅழுத்தம், மனநல பிரச்சினை ஆகிய காரணங்களால் 1,788 பேர் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இதில் 1,285 பேர் ஆண்கள். 502 பேர் பெண்கள். ஒருவர் திருநங்கை. அதிகபட்சமாக ராய்ச்சூரில் 17.7 சதவீதம் பேர் தற்கொலை செய்து தங்களது உயிரை மாய்த்து உள்ளனர்.

சற்று குறைவு

பீதரில் 9.3 சதவீதம் பேரும், சிக்பள்ளாப்பூரில் 7.7 சதவீதம் பேரும், பெங்களூரு நகரில் 7.5 சதவீதம் பேரும் தற்கொலை செய்து கொண்டு உள்ளார்கள். விஜயாப்புராவில் 0.6 சதவீதம் பேர், யாதகிரியில் 0.7 சதவீதம் பேர், குடகில் 0.8 சதவீதம் பேர் தற்கொலை செய்து உள்ளனர்.

கடந்த 2020-ம் ஆண்டு கர்நாடகத்தில் 2,456 பேர் மனஅழுத்தம், மனநல பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். 2020-ஐ காட்டிலும் 2021-ல் தற்கொலை சற்று குறைந்து உள்ளது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


Next Story