பெங்களூருவில் ஆம்புலன்ஸ் மோதி 2 பேர் சாவு

பெங்களூருவில் ஆம்புலன்ஸ் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
சிக்கஜாலா:
பெங்களூரு பனசங்கரியை சேர்ந்தவர் நாகேந்திரா. இவர், தனியார் காபி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அந்த நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பங்கேற்க தரபனஹள்ளிக்கு நாகேந்திரா வந்திருந்தார். அங்குள்ள ஓட்டலில் அவர் தங்கி இருந்தார். அதே காபி நிறுவனத்தில் பணியாற்றும் மைசூருவை சேர்ந்த பிரகாசும் ஓட்டலில் தங்கி இருந்தார். இந்த நிலையில், நாகேந்திராவும், பிரகாசும் ஓட்டல் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆம்புலன்ஸ் 2 பேர் மீதும் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட நாகேந்திரா, பிரகாஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.
உடனே ஆம்புலன்சை விட்டு விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். ஆம்புலன்சில் இருந்த மற்றொரு நபரான விவேக் போலீசாரிடம் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்தார்கள். ஆம்புலன்சில் நோயாளி இல்லாமல் இருந்த போதும், சைரனை ஆன் செய்துவிட்டு அதிவேகமாக டிரைவர் ஓட்டி வந்ததால், அவரது கட்டுப்பாட்டை இழந்து 2 பேர் மீதும் மோதியது தெரிந்தது. இதுகுறித்து சிக்கஜாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவரை தேடிவருகிறார்கள்.