காஷ்மீரில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல் 4 வயது குழந்தை உள்பட மேலும் 2 பேர் பலி


காஷ்மீரில் ஒரே இடத்தில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல் 4 வயது குழந்தை உள்பட மேலும் 2 பேர் பலி
x

காஷ்மீரில் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட அதே இடத்தில் நேற்று குண்டு வெடித்தது. இதில் 4 வயது குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட அதே இடத்தில் நேற்று குண்டு வெடித்தது. இதில் 4 வயது குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர்.

காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்துக்கு உட்பட்ட டாங்கிரி கிராமத்துக்குள் நேற்று முன்தினம் மாலை பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த 2 மர்ம நபர்கள் அங்கிருந்த 3 வீடுகளில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அந்த வீடுகளில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும் யாரும் பிடிபடவில்லை.

இந்த நிலையில் மர்ம நபர்களின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பிரீதம் லால் என்வரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டில் நேற்று காலை உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அப்போது காலை 9.30 மணியளவில் பிரீதம் லால் வீட்டுக்கு அருகே பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் சான்வி சர்மா (வயது 7) விஹான் குமார் சர்மா (4) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் அக்கா, தம்பி ஆவர்.

மேலும் 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குண்டு வெடிப்பு நடந்த இடத்தை ஆய்வு செய்தனர்.

துப்பாக்கிச்சூடு நடந்த 14 மணி நேரத்துக்குள் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த தொடர் பயங்கரவாத தாக்குதல்களை கண்டித்து ரஜோரி மாவட்டம் முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக ரஜோரி நகரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் டாங்கிரி கிராமத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா தாக்குதல்களில் உயிரிழந்த பொதுமக்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.


Next Story