9 ஆண்டுகளுக்கு முன்னர் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மீது 4 வது முறையாக ஆசிட் வீச்சு

உத்தரபிரதேச மாநிலத்தில் 9 ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் மீது 4 வது முறையாக ஆசிட் வீசப்பட்டு உள்ளது.
லக்னோ,
லக்னோவின் அலிகாஞ்ச் பகுதியில் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் உணவகம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. உணவகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அவ்வபோது போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் நேற்று இரவு 8 மணிக்கு மேல் உணவகம் நடத்திவரும் பெண், உணவகத்திற்கு வெளியே தண்ணீர் பிடிக்க சென்ற போது ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டார். தண்ணீர் பிடிக்க சென்ற பெண் மீது மர்ம நபர்கள் ஆசிட்டை வீசிவிட்டு தப்பிவிட்டனர். அவருடைய இடது முகம் பகுதியில் ஆசிட் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் டிஜிபி குமார் பிரசாத் கூறிஉள்ளார்.
கடந்த மார்ச் மாதம் பாதிக்கப்பட்ட பெண் ரேபரேலியில் உள்ள சொந்த கிராமத்திற்கு சென்றுவிட்டு லக்னோ திரும்பிய போது இரண்டு பேர் அவரை வலுக்கட்டாயமாக ஆசிட்டை குடிக்க செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் சென்று ஆறுதல் கூறினார். மேலும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி பாதுகாப்பும் வழங்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஒரு தாக்குதல் நடந்து உள்ளது.
இரண்டு குழந்தைகளுக்கு தயானான பாதிக்கப்பட்ட பெண் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த 2008-ம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானார். பின்னர் மூன்று வருடங்கள் கழித்து 2011-ம் ஆண்டு அவர் மீது ஆசிட் வீசப்பட்டது. 2013-ம் ஆண்டும் ஆசிட் வீச்சுக்கு ஆளானார். கடந்த மார்ச் மாதம் அவரை ஆசிட் குடிக்க செய்தனர். இப்போது மீண்டும் அவர் மீது ஆசிட் வீசப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கைது நடவடிக்கையும், விசாரணையும் தொடர்கிறது. இதுவரையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
Related Tags :
Next Story