எனது சிறந்த பணிக்கான பரிசுதான் இடமாறுதல்: உ.பி பெண் போலீஸ் அதிகாரி கருத்து


எனது சிறந்த பணிக்கான பரிசுதான் இடமாறுதல்: உ.பி பெண் போலீஸ் அதிகாரி கருத்து
x
தினத்தந்தி 3 July 2017 3:51 PM IST (Updated: 3 July 2017 3:51 PM IST)
t-max-icont-min-icon

எனது சிறந்த பணிக்கான பரிசுதான் இடமாறுதல் என்று பாஜக தலைவருடன் ஏற்பட்ட மோதலையடுத்து இடமாற்றம் செய்யப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மீரட்,

உத்தரபிரதேசத்தின் புலந்த்சாகர் மாவட்டத்துக்கு உட்பட்ட சையானாவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் ஷ்ரேஸ்தா தாகூர்.இவர் கடந்த மாதம் 22–ந் தேதி அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரமோத் குமார் என்ற பா.ஜனதா பிரமுகரை தடுத்து நிறுத்தி 200 ரூபாய் அபராதம் விதித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் உள்ளூர் பா.ஜனதா நிர்வாகிகளை தொலைபேசியில் அழைத்தார். அதன்பேரில் நகர பா.ஜனதா தலைவர் முகேஷ் பரத்வாஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு வந்து, பெண் போலீஸ் அதிகாரி ஷ்ரேஸ்தாவிடம் தகராறில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தன்னை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 5 பேரை ஷ்ரேஸ்தா கைது செய்தார்.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை தங்கள் கவுரவ பிரச்சினையாக எடுத்துக்கொண்ட பா.ஜனதாவினர் இது குறித்து முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்திடம் முறையிட்டனர். கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் இது தொடர்பாக முதல்–மந்திரியை சந்தித்து பேசினர்.இதைத்தொடர்ந்து பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷ்ரேஸ்தாவை பரேக் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

நேர்மையாக செயல்பட்ட அதிகாரியை இட மாற்றம் செய்ததால் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதேவேளையில், இட மாற்றம் செய்யப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கவலைப்படாதீர்கள் எனது நண்பர்களே.. நான் மகிழ்ச்சியாக உள்ளேன். சிறந்த பணிக்காக எனக்கு அளிக்கப்பட்ட இந்த பரிசை நான் ஏற்றுக்கொள்கிறேன். விளக்கு எங்கு சென்றாலும் ஒளியை வீசும்” என்று தெரிவித்துள்ளார்.

சிறிது நேரத்தில் பெண் போலீஸ் அதிகாரி தனது பேஸ்புக் கருத்தை நீக்கிவிட்டார்.எனினும்  ஸ்கிரீன்ஷாட் செய்யப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நாங்கள் உங்களுடன் இருப்போம் எனவும் அவருக்கு ஆதரவாக பேஸ்புக் பயனாளர்கள் பதிவிட்டு வருகின்றனர். போலீஸ் அதிகாரி  ஷ்ரேஸ்தா தாகூருக்கு ஆதரவாக பேஸ்புக்கில் ஒரு பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தை தற்போது வரை 2000 க்கும் மேற்பட்டோர் பின்பற்றி வருகின்றனர். 

Next Story