மோடியின் கொள்கைகள் இந்து கலாசாரத்துக்கு எதிரானவை ராகுல் காந்தி பேச்சு

பிரதமர் மோடியின் கொள்கைகள் இந்து கலாசாரத்துக்கு எதிரானவை என்று ராகுல் காந்தி கூறினார்.
ஹரித்துவார்,
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்து மதம் சகிப்புத்தன்மை, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டது. ஆனால் தன்னை இந்து என்று கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி, ஒரு சாதிக்கு எதிராக மற்றொரு சாதியையும், ஒரு மதத்துக்கு எதிராக இன்னொரு மதத்தையும், ஒரு பிராந்தியத்துக்கு எதிராக மற்றொரு பிராந்தியத்தையும் பிளவுபடுத்தி பேசி நாட்டின் சூழ்நிலையை இழிவுபடுத்தி வருகிறார். அவரது கொள்கை இந்து கலாசாரத்துக்கு எதிரானது.
சமுதாயத்தில் தலித்துகள், சிறுபான்மையினர் மற்றும் இதர பிரிவினர் தற்போது இந்தியாவில் தங்களுக்கு பாதுகாப்பற்ற தன்மை நிலவுவதாக கருதுகிறார்கள்.
பணக்காரர்களின் காவலாளி
நாங்கள் அனைத்து மக்களிடையேயும் அன்பு, நல்லுறவு, சகோதரத்துவம் நிலவக்கூடிய ஒரு தேசத்தை உருவாக்க விரும்புகிறோம். மோடி ஏழைகள் ஒரு பக்கம், அனில் அம்பானி, மெகுல் சோக்சி, நிரவ் மோடி போன்ற பணக்காரர்கள் ஒரு பக்கம் என இரண்டு இந்தியாவை உருவாக்க நினைக் கிறார். நிரவ் மோடியிடம் ரூ.33 ஆயிரம் கோடி கொடுத்து உதவி செய்துள்ளார்.
ஏழைகளுக்கு காவலாளி தேவையில்லை. விவசாயிக்கோ அல்லது தொழிலாளிக்கோ காவலாளி தேவையா? பணக்காரர்களுக்கு மட்டுமே காவலாளி தேவை. மோடி தான் அவர்களது காவலாளி. நாங்கள் 25 சதவீதம் ஏழைகளுக்கு வருடத்துக்கு ரூ.72 ஆயிரத்தை நேரடியாக அவர்களது கணக் கில் செலுத்துவோம்.
சிறைக்கு அனுப்பமாட்டோம்
பண மதிப்பிழப்பு இந்திய பொருளாதாரத்தில் ஒரு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிறு வியாபாரிகள், வர்த்தகர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. எளிமைப்படுத்தப்படும். கங்கை கரையில் வாழும் நீங்கள் சொல்லுங்கள், மோடி வாக்குறுதி அளித்தபடி கங்கை தூய்மையாகிவிட்டதா?
கரும்பு விவசாயிகளின் நிலுவை தொகை ரூ.530 கோடி இன்னும் வழங்கப்படவில்லை. இந்த அரசு செயல்படுகிறதா? காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயிகளின் நிலுவை தொகையை சர்க்கரை ஆலைகள் வழங்கும். கடனை செலுத்த முடியாத விவசாயிகளை சிறைக்கு அனுப்ப முடியாதபடி ஒரு சட்டம் நிறைவேற்றப்படும்.
வங்கி கடனை செலுத்தாத மெகுல் சோக்சி, அனில் அம்பானி, நிரவ் மோடி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்களா என்ன? பின்னர் ஏன் ஏழை விவசாயிகளை மட்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும்?
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
Related Tags :
Next Story