அதிகாரிகள் மாற்றத்துக்கு எதிர்ப்பு: ‘தேர்தல் கமிஷன் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது’ திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

மேற்கு வங்காளத்தில் சில போலீஸ் அதிகாரிகளை தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்துள்ளது. இதற்கு முதல்–மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
பா.ஜனதாவினரின் தூண்டுதலின் பேரில் இந்த இடமாற்றத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டதாக குற்றம் சாட்டி வருகிறார். இது தொடர்பாக ஏற்கனவே அவர் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில்,
நேற்று திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர்கள் தேர்தல் கமிஷனில் குறிப்பாணை ஒன்றை நேரில் அளித்தனர். ‘தேர்தல் கமிஷனின் ஒருதலைப்பட்சம்’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்ட அந்த புகார் மனுவில் 9 கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனுவை திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவர்களான டெரிக் ஓபிரையன், சுகேந்து சேகர் ராய், சந்தன் மித்ரா ஆகியோர் வழங்கினர்.
பின்னர் டெரிக் ஓபிரையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தேர்தல் கமிஷன் மோசமான கமிஷனாக மாறியுள்ளதாக மக்கள் பேசி வருகின்றனர். எல்லாம் போதும். மேற்கு வங்காளத்தில் சிறந்த, நேர்மையான மூத்த போலீஸ் அதிகாரிகளை பா.ஜனதா தலைவர்களின் தூண்டுதலின் பேரில் தேர்தல் கமிஷன் மாற்றியுள்ளது’ என்று தெரிவித்தார்.