சிவசேனா கோரிக்கை: பாரதீய ஜனதா நிராகரித்தது

இலங்கையில் சமீபத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து, அந்நாட்டு அரசு பெண்கள் முகத்தை மறைத்தவாறு பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதித்துள்ளது.
புதுடெல்லி,
பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் இதனை மேற்கோள்காட்டி, இந்தியாவில் பயங்கரவாத செயலை தடுக்கும் வகையில் பெண்கள் முகத்தை மறைத்து வருவதற்கு தடை விதிக்க வேண்டும் என அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் கருத்து தெரிவித்து உள்ளது.
ஆனால் சிவசேனாவின் இந்த கோரிக்கையை பாரதீய ஜனதா நிராகரித்து உள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மராவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘மோடியின் ஆட்சி காலத்தில் இந்தியாவில் மராட்டியம் உள்பட எந்த மாநிலத்திலும் பயங்கரவாத தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை. அதனால் அதற்கு அவசியமில்லை என கருதுகிறேன். ஒவ்வொரு நாடும் தனது பாதுகாப்பை கருத்தில் கொண்டு இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும். ஆனால் மோடியின் ஆட்சியில் அந்த பயம் இல்லை. இதனால் பெண்கள் முகத்திரை அணிந்து வருவதற்கு தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை’ என்றார்.